சென்னையின் சாலையில் சென்று கொண்டிருக்கும் இளம் பெண்களை குறிவைத்து நிகழ்ந்த பாலியல் சீண்டல் சம்பவங்கள் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் யார் என்பது கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றி வரும் விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், மேற்கு மாம்பலம் வீராச்சாமி தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத ஒருவர், அந்த பெண் இயக்குநரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவிட்டு தப்பிவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் உதவி இயக்குநர், இதுகுறித்து அசோக்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல், மேற்கு மாம்பலம் மூர்த்தி தெருவில் 20 வயது மதிப்பிலான இளம்பெண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து பைக்கில் சென்ற நபர், பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியான அந்த இளம்பெண் தனது தந்தையுடன் அசோக்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
ஜாபர்கான்பேட்டை பகுதியிலும் இதேபோன்றதொரு சம்பவம் நடந்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவர், ஜாபர்கான்பேட்டை ராகவன் காலனி பகுதியில் நேற்றிரவு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற நபர், திடீரென பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குமரன் நகர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 3 சம்பவங்களிலும் ஒரேநபர் தான் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சுமார் 25க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கூட்ட நெரிசல் மிகுந்த தெருக்களில் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளவர், அதேபகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதேபோல் சென்னையில் வேறு எந்தெந்த காவல் நிலையங்களில் புகார்கள் வந்துள்ளன என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.