தமிழ்நாடு .. 1967 ஜூலை 18ல் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா.. சட்டசபையில் பேசியது என்ன?

Tamil Nadu Day Anna Speech : 1956 ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்டது. ஜூலை 18 ஆம் தேதி 1967 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Jul 18, 2024 - 09:06
Jul 19, 2024 - 10:07
 0
தமிழ்நாடு .. 1967 ஜூலை 18ல் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா.. சட்டசபையில் பேசியது என்ன?
Tamil Nadu Day Anna Speech

Tamil Nadu Day Anna Speech : தமிழ்நாடு என சென்னை மாகாணத்துக்கு பெயர் சூட்டுவதால் தனிநாடாகிவிடாது; இந்தியாவின் ஒருபகுதியாக இருந்துகொண்டுதான் இந்த பெயரை சூட்டுவதால் சர்வதேச சிக்கல்கள் எழாது என்று சட்டசபையில் மறைந்த தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா உரையாற்றினார்.


1967, ஜூலை 18 அன்று “மெட்ராஸ் ஸ்டேட்” என்பதை மாற்றி, “தமிழ்நாடு” எனும் பெயர் சூட்டப்பெறும் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையினை இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளலாம்.

1956 ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதும், மெட்ராஸ் ஸ்டேட் என்றே தமிழ்நாடு அழைக்கப்பட்டது. இதையடுத்து, ஜூலை 18 ஆம் தேதி 1967 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஜனவரி 14 ஆம் தேதி 1969 ஆண்டு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.

1956 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி , மெட்ராஸ் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றக்கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுதந்திர போராட்ட தியாகியான சங்கரலிங்கனார், விருதுநகரில் தனது வீட்டின் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். போராட்டத்தை கைவிடுமாறு காமராஜர், மா.பொ.சி அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினார். ஆனால் மறுத்துவிட்டார். 76 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார், அக்டோபர் 13 ஆம் நாள் தமிழ்நாட்டிற்காக உயிர் நீத்தார். 

சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம் மா.பொ.சிவஞானம் உள்ளிட்டோரின் குரல்கள், தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை தீவிரமாக்கியது.  தமிழ்நாடு என பெயர் மாற்றக் கோரி பலமுறை தீர்மானம் கொண்டு வரப்பட்டும் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் சட்டசபையில் தமிழ்நாடு என்று பெயர் சூட்டி தீர்மானம் கொண்டு வந்தார்.

தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட இதே நாளில் பேரறிஞர் அண்ணா பேசியதன் ஒரு பகுதி:


தமிழ்நாடு என்று பெயரிடுகின்ற இந்த நிகழ்ச்சி இந்த அவையிலே இன்றைய தினம் உறுப்பினர்களாக இருக்கின்ற ஒவ்வொருவருடைய வாழ்நாளிலும் மிகுந்த மகிழ்ச்சியையும், நல்ல எழுச்சியையும் தரத்தக்க ஒரு திருநாள் ஆகும். இந்தத் திருநாளைக் காண்பதற்கு பன்னெடுங்காலம் காத்துக் கொண்டிருக்க நேரிட்டதே என்பதுதான் மகிழ்ச்சியின் இடையிலே நமக்கு வருகின்ற ஒருதுயரமே தவிர, நெடுங்காலத்திற்கு முன்னாலே நடைபெற்றிருக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சியை மிகுந்த காலம் தாழ்த்தி இன்றைய தினம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்றாலும் இதிலே எல்லாக்கட்சியினரும் ஒன்றுபட்டு இந்தத் தீர்மானத்திற்கு அவர்கள் தங்களுடைய ஆதரவைத் தந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும். 

நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன் கூட இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கிறார்களே தவிரவேறில்லை. அதிலே சில ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறோம் என்று சொல்லியிருப்பது, எதிர்க்கட்சியில் இருப்பவர்களுடைய கடமை என்ற வகையில் ஆலோசனைகளைச் சொல்லவேண்டுமென்ற முறையிலே தவிர,எதிர்க்கிறார்கள் என்று இல்லை.

ஆகையினால் இந்தத் தீர்மானம் எல்லோருடைய ஆதரவையும் பெற்று இந்தியப் பேரரசுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.இந்தியப் பேரரசிலே மிகுந்த செல்வாக்கோடு இருக்கின்ற இரண்டொரு தலைவர்களுடன் உரையாடுகின்ற வாய்ப்புக்கிடைத்த போது இதைப்பற்றி அவர்கள் சொல்லும்போது, தமிழகச் சட்டமன்றத்தில் இது நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படுமானால் இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்துவதிலே தயக்கம் இருக்காது என்பதனை முன்கூட்டியேஎன்னிடத்தில் எடுத்துச்சொல்லியிருக்கிறார்கள். 

அங்குள்ள பல தலைவர்கள்,அதனை அரசை நடத்துகிறவர்கள்கூட ஏற்றுக் கொள்ளுகிறார்கள் என்று எண்ணத்தக்க விதத்தில் பத்துநாட்களுக்கு முன் பாராளுமன்றத்தில் இந்த மாநிலத்தைப் பற்றிப் பேசவேண்டிய வாய்ப்பு கிடைத்த நேரத்தில் அங்குள்ள உள்துறை அமைச்சர் சவான் "மெட்ராஸ்ஸ்டேட்" என்று பேசிப்பழக்கப்பட்டவர் மிகுந்த அக்கறையோடும் மிகுந்தகவனத்தோடும் தமிழ்நாடு என்றுதான் பேசியிருக்கிறார். ஆக இதை அவர்களும் ஏற்றுக்கொண்டு அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒரு நல்ல வாய்ப்பைஇன்றைய தினம் இந்த அவையிலே நாம் பெற்றிருக்கிறோம்.

மதிப்புமிக்க ம.பொ.சி. அவர்கள் இதிலே மிகுந்த மன எழுச்சிபெற்றது இயற்கையான தாகும். அவர்கள் பல ஆண்டுகளாக "தமிழ்நாடு" என்ற பெயர் இந்தநாட்டுக்கு இடப்பட வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறையோடுபாடுபட்டவர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தோழர்களும், திராவிட முன்னேற்றக் கழகம் என்பதிலே 'திராவிட'என்பதை இணைத்துக்கொண்டிருப்பதால் "தமிழ்நாடு" என்பதிலே அக்கறை இல்லாமல் போய் விடுமோ என்று சிலர் எண்ணிய நேரத்தில் "தமிழ்நாடு" என்று பெயரிடுதல் வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தநாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்து கொண்டிருக்கிறோம். 

காங்கிரஸ் கட்சியிலுள்ளவர்களும், மற்றவர்கள்கொண்டு வருகிறார்களே என்பதனாலே முன்னாலே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும் இலக்கியத்தில் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டிருந்தாலும்,இன்றைய தினம் அவர்களும்"தமிழ்நாடு" என்று சொல்லிக் கொள்வதில் மிகுந்த பெருமைப்படுகிறார்கள். ஆகையினால் இந்தத் தீர்மானம்எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் இந்தஅவையிலே நிறைவேற்றப்பட இருக்கிறது என்று கருதுகிறேன்.

அப்படிப்பட்ட ஒரு வெற்றி கிடைக்குமானால் அது இன்று கழகத்திற்கு வெற்றியல்ல, தமிழரசுக் கழகத்திற்கு வெற்றியல்ல, மற்ற கட்சிகளுக்கு வெற்றியல்ல,இது தமிழுக்கு வெற்றி, தமிழருக்கு வெற்றி, தமிழ் வரலாற்றுக்கு வெற்றி,தமிழ்நாட்டுக்கு வெற்றி என்ற விதத்தில்அனைவரும் இந்த வெற்றியிலே பங்குகொள்ளவேண்டும்.

"தமிழ்நாடு என்ற பெயர் இருந்தால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அறிந்துகொள்ளமாட்டார்கள்" என்பதுமட்டுமல்ல, நம்முடைய தொழில் அமைச்சராக முன்னாள் இருந்த வெங்கட்ராமன்அவர்கள், "ஒரு நாட்டுக்கும், இன்னொருநாட்டுக்கும் இடையே செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தம் எல்லாம் திருத்தி எழுதப்பட வேண்டிவரும், அதனாலே சிக்கல்கள் விளையும்" என்றெல்லாம்சொன்னார்கள். 

அதிலிருந்து அவர்கள்வெளிநாடுகளுக் கெல்லாம் போய்வந்தார்கள் என்பதைத் தான் கவனப்படுத்துகிறார்களே தவிர, உண்மையாகச்சிக்கல்கள் இருக்கின்றனவாஎன்பதைக் கவனப்படுத்த வில்லை. மதிப்பிற்குரிய நண்பர் பாலசுப்பிரமணியம் அவர்கள் எடுத்துச் சொன்னபடி "கோல்டு கோஸ்ட்" என்பது "கானா"ஆகி விட்டது. அதனால் எந்தவிதமான சர்வ தேசச் சிக்கல்களும் ஏற்பட்டுவிடவில்லை.

நண்பர் ஆதிமூலம் அவர்கள். “தமிழ்நாடு” என்ற பெயர் மாற்றத்திற்காகத் தன்னைத்தானே தியாகம் செய்துகொண்ட சங்கரலிங்கனார் அவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பவேண்டும் என்று குறிப் பிட்டார்கள். அதையும் அத்தனைபேரும் உள்ளத்திலே, கருத்திலே கொள்ளுவார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன். அவருடைய எண்ணங்கள் இன்றைய தினம் ஈடேறத்தக்க நிலை கிடைத்திருப்பதும், அந்த நிலையை உருவாக்குவதிலே நாம் அனைவரும் பங்கு பெற்றிருக்கிறோம் என்பதும் நமக்கெல்லாம் நம் வாழ்நாள் முழுவதும் பெருமைப்படத்தக்க காரியமாகும்.

நம்முடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நெடுங்காலத்திற்குப் பிறகும்முடைய இல்லங்களிலே அமர்ந்து பேசிக்கொள்ளுகின்ற நேரத்தில், பெருமையோடு சொல்லிக் கொள்ளஇருக்கிறார்கள். “என்னுடைய பாட்டனார் காலத்திலே தான் நம்முடைய நாட்டுக்கு “தமிழ்நாடு” என்ற பெயர் இடப்பட்டது. எதிர்க்கட்சியிலே உட்கார்ந்து கொண்டிருந்த என்னுடைய பாட்டனார் கருத்திருமன் இதை ஆதரித்தார்” - என்று கருத்திருமன் பேரப் பிள்ளைகளும், எங்களுடைய பேரப் பிள்ளைகளும் எதிர்காலத்திலே பேசக்கூடிய நல்ல நிலைமைகளை எல்லாம் எண்ணிப் பார்ப்பார்களேயானால் நிச்சயமாக அந்த ஆலோசனையைக் கூடச்சொல்லாமல் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் ஒரு துளியும் அய்யப்பாடு கொள்ளவில்லை.

தமிழ்நாடு தனி நாடாகி இந்தப்பெயரை இடவில்லை, இந்தியாவில் ஒருபகுதியாக இருந்து கொண்டு இந்தப்பெயரை இடுவதால் இதிலே சர்வதேசச்சிக்கல்கள் எழுவதற்கு நியாயமில்லை. சட்டமன்றத் தலைவர் அவர்களே,வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கின்ற இந்த நன்னாளில் "தமிழ்நாடு" என்றுநான் சொன்னதும் "வாழ்க" என்றுஅவை உறுப்பினர்கள் சொல்லுவதற்குத் தங்களுடைய அனுமதியைக்கோருகிறேன் என்று பேரறிஞர் அண்ணா உரையாற்றினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow