Nellai New Mayor : நெல்லை மேயரானார் ராமகிருஷ்ணன்.. திமுக தலைமைக்கு நன்றி!
Nellai New Mayor Ramakrishnan : செய்தியாளர்களிடம் பேசிய ராமகிருஷ்ணன், ''நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த திமுக தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வாக்களித்த மாமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்'' என்று கூறினார்.

Nellai New Mayor Ramakrishnan : தமிழ்நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மிக அதிகமான இடங்களில் வெற்றி பெற்றன. நெல்லை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில், திமுக கூட்டணி 51 வார்டுகளை கைப்பற்றி அசத்தியது. நெல்லை மாநகராட்சி மேயராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயராக கே.ஆர்.ராஜூ நியமிக்கப்பட்டார்.
ஆனால் சரவணன் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து அவரை சுற்றி தொடர்ந்து சர்ச்சைகள் வலம்வரத் தொடங்கின. மேயர் சரவணன் ஒரு குறிப்பிட்ட கவுன்சிலர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், வார்டில் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்க மறுப்பதாகவும் திமுக கவுன்சிலர்கள் பலர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள்.
மேலும் மேயர் சரவணனுக்கு எதிராக 38 திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த சர்ச்சை திமுக தலைமை வரை சென்றதால், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நெல்லை மேயர் சரவணன் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், அண்மையில் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதன்பிறகும் நெல்லை மாநகராட்சி மேயர் பதவி தொடர்பாக சர்ச்சை ஓயாமல் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்த விவகாரம் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரை சென்ற நிலையில், இந்த விவகாரத்தில் கலந்து பேசி உரிய முடிவெடுக்க நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு ஸ்டாலின் உத்தரவிட்டார்.
நெல்லை மேயரை தேர்வு செய்வது தொடர்பாக நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மாநகராட்சி கவுன்சிலர்களிடம் ஆலோனை நடத்தினர்; கருத்துக்களை கேட்டனர். இந்த கூட்டம் முடிந்தபிறகு, நெல்லை மேயருக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்கிற கிட்டு போட்டியிடுவார் என கே.என்.நேரு-தங்கம் தென்னரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமையே நேரடியாக அறிவித்து விட்டதால், இன்று ராமகிருஷ்ணன் என்கிற கிட்டுவை எதிர்த்து யாரும் போட்டியிட மாட்டார்கள் என்று தகவல்கள் கூறின. ஆனால் அனைவரின் எதிர்பார்ப்புக்கு மாறாக, திடீர் திருப்பமாக பவுல்ராஜ் என்பவர் கிட்டுவை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்தார். இதனால் நெல்லை மாநகர திமுகவில் குழப்பம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதிய மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை நடந்தது. அப்போது ராமகிருஷ்ணன் என்கிற கிட்டு வெற்றி பெற்று புதிய மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொத்தம் பதிவான 54 வாக்குகளில் கிட்டு 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கிட்டுவை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகளை பெற்றார். ஒரு ஓட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டது.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிட்டு, ''நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த திமுக தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வாக்களித்த மாமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்'' என்று கூறினார். மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற கிட்டுவுக்கு நெல்லை மாநகராட்சி ஆணையர் சான்றிதழ் வழங்கினார். நெல்லை மாநகராட்சி 25வது வார்டு கவுன்சிலராக இருந்து வரும் ராமகிருஷ்ணன், தொடர்ந்து 3வது முறையாக நெல்லை மாநகராட்சி கவுன்சிலராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






