Dengue Fever in Tamil Nadu : 'டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.. மக்கள் அச்சப்பட வேண்டாம்' - மா.சுப்பிரமணியன்

Minister Ma Subramanian on Dengue Fever in Tamil Nadu : ''சென்னை மாநகராட்சி சார்பில் 3,000க்கும் அதிகமான பணியாளர்கள் டெங்கு கண்காணிப்பு மற்றும் ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேளச்சேரி மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீர் தேங்காதிருக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்று மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Aug 5, 2024 - 13:24
Aug 6, 2024 - 10:09
 0
Dengue Fever in Tamil Nadu : 'டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.. மக்கள் அச்சப்பட வேண்டாம்' - மா.சுப்பிரமணியன்
Minister Ma Subramanian on Dengue Fever in Tamil Nadu

Minister Ma Subramanian on Dengue Fever in Tamil Nadu : தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. 

சென்னையிலும் நேற்று இரவு முதல் விடிய, விடிய மழை கொட்டியது. தொடர் மழை காரணமாக தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் 700க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

டெங்கு பாதிப்பு ஏடிஸ் வகை கொசு கடிப்பதால் ஏற்படுகிறது. இந்த வகை கொசுக்கள் நன்னீரில் வாழும் தன்மை கொண்டது. பரவலாக மழை பெய்து வருவதால் மழை நீர் ஆங்காங்கே தேங்கி நின்று, அதன் மூலம் கொசு அதிகரிக்கிறது. அதனால், ஏடிஸ் கொசுவை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக  தமிழ்நாடு அரசு கூறியது.

மேலும் டெங்கு பரவலை தடுக்க பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும், தண்ணீர் தொட்டிகள், தண்ணீரை சேமித்து வைக்கும் இடங்களை பாதுபாப்பாக மூடி வைக்கவும், மாநகராட்சி பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல்(Dengue Fever) பரவி வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த மா.சுப்பிரமணியன், ''தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஆகவே டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை. 

சென்னை மாநகராட்சி சார்பில் 3,000க்கும் அதிகமான பணியாளர்கள் டெங்கு  கண்காணிப்பு மற்றும் ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேளச்சேரி மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீர் தேங்காதிருக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 1 கோடியே 86 லட்சத்து 13 ஆயிரத்து 872 பேர் இதுவரை பயன் அடைந்துள்ளனர். சென்னையில் 53 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு  மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. 2 கோடி பயனாளர்களை விரைவில் எட்டக்கூடிய வகையில் மக்களை தேடி மருத்துவ திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கும், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை கொண்டு செல்ல 104 என்கிற அவசர அவசர கால எண் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் இந்த எண்ணிற்கு அழைத்தால் அவர்களுக்கு சேவை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow