சென்னை: கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் நடக்கும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பண மோசடி மட்டுமில்லாமல் காதல், திருமணம் என பல அந்தரங்க சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. முன்பெல்லாம் கடிதம் வழியாகவும், தொலைபேசிகளிலும் வளர்ந்த காதல்கள், இப்போது சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவைகளில் சிக்கி சின்னாப்பின்னமாகிக் கொண்டிருக்கின்றன. அப்படியொரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், இன்ஸ்டாகிரம் மூலம் பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் என்பவருடன் நட்பாக பழகியுள்ளார். நாளடைவில் நட்பு காதலாக, இருவரும் ரிஜிஸ்டர் திருமணம் செய்துகொண்டு யாருக்கும் தெரியாமல் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இவர்களது திருமணம் 2022ம் ஆண்டு மதுராந்தகம் சர் பதிவாளர் அலுவலத்தில் நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங்கின் போக்கில் மாற்றம் இருந்துள்ளது.
இன்ஸ்டா காதல் மனைவியிடம் நகை, பணம் கேட்டு டார்ச்சர் செய்த பிரின்ஸ், திடீரென அவருடனான தொடர்பை துண்டித்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். இதனால் அதிர்ச்சியான இன்ஸ்டா காதலி, பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங்கை தேடி அவரது வீட்டுக்குச் செல்ல, அங்கே அவருக்கு இன்னொரு பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஆம்! பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தது இன்ஸ்டா காதலிக்கு தெரியவந்துள்ளது. எதுவுமே தெரியாத அப்பாவி போல இருந்துகொண்டு ஒரேநேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியுள்ளார் பிரின்ஸ்.
இன்ஸ்டா காதலியை ரிஜிஸ்டர் மேரேஜ் செய்த மறுநாளிலேயே, வீட்டில் பார்த்திருந்த பெண்ணையும் திருமணம் செய்துள்ளார் பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங். ‘கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா..?’ என்பதை போல, இரண்டு பக்கமும் சிக்கிவிடாமல் சிக்குபுக்கு ஆட்டம் ஆடியுள்ளார் பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங். இதனையடுத்து இன்ஸ்டாவில் ஏமாந்த திருநின்றவூரைச் சேர்ந்த 21 வயது பெண், பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் மீது பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக கேளம்பாக்கம் சர்ச் தெருவைச் சேர்ந்த பிரின்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஒரேநேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிய பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங்கிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் வழியாக நடக்கும் மோசடிகளில் சிக்கிவிடாமல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகின்றன. அப்படி இருந்தும் முன்பின் தெரியாத ஒருவருடன், இளம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும் அளவிற்கு ஆன்லைனில் பழகுவதை தவிர்க்க வேண்டும் என, பொதுமக்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.