விஜய்யால் நல்லது நடந்தால் சந்தோசம்.. மாநாட்டில் எதிர்பார்க்கிறேன் - துரை வைகோ

கட்சியின் நிலைப்பாட்டை மாநாட்டில் விஜய் நல்லபடியாக கூறுவார் என எதிர்பார்க்கிறேன் என்றும் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Sep 8, 2024 - 20:54
Sep 9, 2024 - 10:55
 0
விஜய்யால் நல்லது நடந்தால் சந்தோசம்.. மாநாட்டில் எதிர்பார்க்கிறேன் - துரை வைகோ
துரை வைகோ மற்றும் நடிகர் விஜய்

சென்னையில் கடந்த மாதம் மதிமுக பொதுக்குழு உறுப்பினர் கூட்டம் முடித்து விட்டு மதுரை திரும்பிய போது, ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நிர்வாகிகள் பச்சமுத்து, அமிர்தராஜ், புலி சேகர் ஆகியோரின் குடும்பத்தினருக்கு, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ 45 லட்ச ரூபாய் நிதி வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “மகா விஷ்ணு ஆற்றியது ஆன்மீக சொற்பொழிவு அல்ல; அது சனாதன சொற்பொழிவு. என்னைப் பொருத்தவரை ஆன்மீக சொற்பொழிவு நல்லது தான். ஆனால் அது ஆன்மீக சொற்பொழிவு கிடையாது; சனாதன சொற்பொழிவு. இந்து  மதத்தை வைத்து பிழைப்பு நடத்துவது. 

மகா விஷ்ணு தன்னைத் தானே கடவுள் என கூறிக் கொள்கிறார். 70 வயது முதியவர் அவரது காலில் விழுகிறார். இதுதான் ஆன்மீகமா.? இது சனாதனம்! மந்திரம் ஓதினால், மேலிருந்து அக்னி வரும், மந்திரம் ஓதினால் இங்கிருந்து அங்கு பறந்து செல்லலாம் என்பதெல்லாம் பள்ளி மாணவர்களிடம் பேசக்கூடிய பேச்சா? இதுதான் சனாதன பேச்சு.

இந்து மதம் வேறு, சனாதனம் என்பது வேறு. இந்து மதத்தை நாங்கள் வெறுக்கவில்லை, எதிர்க்கவில்லை. சனாதனத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை, உடன்கட்டை ஏறுவது, பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது, பள்ளிக்கு சென்று படிக்க கூடாது என்று சொல்வதை தான் எதிர்க்கிறோம். இதுபோன்ற தவறான சித்தாந்தங்கள், மூடநம்பிக்கைகளை பரப்புபவர்கள் சனாதன சொற்பொழிவாளர்கள் என்கிறோம். இதுபோன்ற சனாதன சொற்பொழிவு தான் மகாவிஷ்ணு பேசியது. அவர் மகா விஷ்ணு கிடையாது, மகா பொய்க்காரர்.

தமிழகம் மீனவர்கள் சிறை பிடிப்பது, தமிழக முதல்வர் அதற்கு கடிதம் எழுதுவது, எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் குரல் கொடுப்பது, போராட்டம் நடத்துவது, தொடர் கதையாகி உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு மத்திய அரசின் கையில் தான் உள்ளது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக குரல் கொடுத்தேன்.

நடிகர் விஜய் சினிமா உலகில் ஜொலிக்கும் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். அவரை இளைஞர் முதல் அனைவரும் விரும்புகிறார்கள். தமிழ்நாட்டிற்கு ஒரு நல்லது நடந்தால் நிச்சயம் சந்தோசம் தான். மதிமுக சந்தோசம் அடையும். அவர் கட்சிக்கொடி அறிமுக விழாவில் சமூக நீதியும், மதச்சார்பின்மையும் பற்றி கூறியிருக்கிறார். அன்றைய தினமே அதனை வரவேற்கிறோம்.

அவர் நல்லது நினைக்கலாம். ஆனால் நடைமுறை அரசியலில், நான் 4 ஆண்டுகள் அரசியலில் இருக்கிறேன். அவ்வளவு கஷ்டங்கள், துயரங்கள், பிரச்சனைகள் நடைமுறை அரசியலில் உள்ளது. இதையெல்லாம் கடந்து, மாநாட்டில் தன்னுடைய கட்சியின் நிலைப்பாட்டை கொள்கையை விரிவாக கூறுகிறேன் என சொல்லி இருக்கிறார். நல்லபடியாக கூறுவார் என எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow