Nellai Mayor Candidate : அட! இப்படி ஒரு அரசியல்வாதியா.. சைக்கிளில் வலம் வரும் நெல்லை மேயர் வேட்பாளர்!

Nellai Mayor Candidate Ramakrishnan : நெல்லை மாநகராட்சி கூட்டம் மட்டுமின்றி எங்கு சென்றாலும் சைக்கிளில் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளாராம் ராமகிருஷ்ணன். நேற்று நெல்லை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, ராமகிருஷ்ணன் சைக்கிளில் சென்று தனது தாயாரிடம் ஆசி பெற்ற வீடியோ காட்சிகள் வைரலாகின.

Aug 5, 2024 - 12:34
Aug 6, 2024 - 10:09
 0
Nellai Mayor Candidate : அட! இப்படி ஒரு அரசியல்வாதியா.. சைக்கிளில் வலம் வரும் நெல்லை மேயர் வேட்பாளர்!
Nellai Mayor Candidate Ramakrishnan

Nellai Mayor Candidate Ramakrishnan : கடந்த 2022ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாநகராட்சியில் திமுக அபார வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 55 வார்டுகளில், திமுக கூட்டணி 51 வார்டுகளை கைப்பற்றி அசத்தியது. நெல்லை மாநகராட்சி மேயராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட கவுன்சிலர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், வார்டில் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்க மறுப்பதாகவும் திமுக கவுன்சிலர்கள் பலர் போர்க்கொடி தூக்கினார்கள். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்தனர். 

இந்த சர்ச்சை திமுக தலைமை வரை சென்றதால், அண்மையில் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன்பிறகும் நெல்லை மாநகராட்சி மேயர் பதவி தொடர்பாக சர்ச்சை ஓயாமல் நீடித்து வந்ததால், இந்த விவகாரத்தில் கலந்து பேசி உரிய முடிவெடுக்க நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேருவும், தங்கம் தென்னரசுவும் புதிய மேயரை தேர்வு(Nellai Mayor Election) செய்வது தொடர்பாக நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்களிடம் நேற்று ஆலோனை நடத்தினர்; கருத்துக்களை கேட்டனர். இந்த கூட்டம் முடிந்தபிறகு, நெல்லை மேயருக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக ராமகிருஷ்ணன்(DMK Mayor Ramakrishnan) என்கிற கிட்டு போட்டியிடுவார் என கே.என்.நேரு-தங்கம் தென்னரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

நெல்லை மாநகராட்சி 25வது வார்டு கவுன்சிலராக இருந்து வரும் ராமகிருஷ்ணன்(Ramakrishnan), தொடர்ந்து 3வது முறையாக நெல்லை மாநகராட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். 8ம் வகுப்பு வரை படித்துள்ள ராமகிருஷ்ணன் எளிமைக்கு பெயர் போனவர். தனக்கு சொந்தமாக சைக்கிள் ஒன்றை வைத்திருக்கும் இவர் தினமும் அந்த சைக்கிளில் சென்றுதான் வார்டு மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை மாநகராட்சி கூட்டம் மட்டுமின்றி எங்கு சென்றாலும் சைக்கிளில் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளாராம் ராமகிருஷ்ணன். நேற்று நெல்லை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, ராமகிருஷ்ணன் சைக்கிளில் சென்று தனது தாயாரிடம் ஆசி பெற்ற வீடியோ காட்சிகள் வைரலாகின. இன்று நெல்லை மாநகராட்சி மேயராக அவர் பதவியேற்க உள்ளார் என தகவல் வெளியாகி வரும் நிலையில், நெல்லை மாநகராட்சி அலுவகத்துக்கு இன்றும் சைக்கிளில்தான் வந்தார் ராமகிருஷ்ணன்.

இன்றைய நவீனகாலத்தில் சாதாரண மக்களே சைக்கிளை முழுமையாக மறந்து விட்டு இருசக்கர வாகனங்களில் பறந்து வருகின்றனர். அதுவும் அரசியல்வாதி என்றால் சொல்லவா வேண்டும். அரசியல்வாதிகள் எந்த ஒரு சிறு பதவியில் இருந்தாலும் சுற்றிலும் நான்கு பேர் புடைசூழ சொகுசு கார்களில் பந்தாவாக வலம்வரவே விரும்புவார்கள். ஆனால் அரசியல்வாதிகளில் அதிசயமாக விளங்கி வரும் ராமகிருஷ்ணன், மிகவும் சாதாரணமாக சைக்கிளில் சென்று வருவது நெல்லை பகுதி மக்கள் மட்டுமின்றி தமிழ்நாடு மக்கள் முழுவதையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow