100 கோடி நில மோசடி.. எம்ஆர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீட்டில் சிபிசிஐடி ரெய்டு.. கரூரில் பரபரப்பு

கரூர்: கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 100 கோடி நில மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள எம்ஆர் விஜயபாஸ்கர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Jul 5, 2024 - 10:01
Jul 5, 2024 - 12:20
 0
100 கோடி நில மோசடி.. எம்ஆர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீட்டில் சிபிசிஐடி ரெய்டு.. கரூரில் பரபரப்பு
MR Vijayabaskar Supporters CBCID Raid

கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல்காதர் கரூர் நகர போலீசில் கொடுத்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீதும் இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த 22 ஏக்கர் நிலம் சுமார் ரூ.100 கோடி மதிப்புடையது. இந்த புகாரின் மீது கரூர் நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கினர்.

இதேபோல், கரூர் மாவட்ட வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், ‘தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் எனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் எனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர்’ என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கரூர் நகர போலீசார் வழக்கு தொடர்பான கோப்புகள், திரட்டிய தகவல்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் எந்த நேரத்திலும் போலீசாரால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாகி விட்டார். 

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய யுவராஜ், செல்வராஜ் உள்பட 4 பேர் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் தாளப்பட்டியில் உள்ள யுவராஜ் வீடு, தோட்டக்குறிச்சியில் உள்ள செல்வராஜ் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். 22 ஏக்கரை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த யுவராஜ், ரகு, செல்வராஜ், மாரப்பன் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடைக்கால முன்ஜாமின் வழக்கில் இன்று தீர்ப்பு வரும் நிலையில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

முன்னதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 12ஆம் தேதி முன்ஜாமின் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் ஆனால், அவரது முன்ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2வது முறையாக முன்ஜாமீன் கேட்டு விஜயபாஸ்கர் இன்னொரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்தமனுவில், தன்னுடைய அப்பாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.. இந்த மனு நேற்றைய தினமே விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசாரணையை இன்றைய தினம் (ஜூலை 5) தேதிக்கு தள்ளி வைத்து கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில் அவருக்கு ஜாமின் கிடைக்குமா? தள்ளுபடி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow