ரூ.68,773 கோடி திட்டம், 1,06,800 பேருக்கு வேலை வாய்ப்புகள்.. உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடக்கம்

ரூ.68,773 கோடி ரூபாய்க்கான திட்டத்தின் மூலம், 1,06,800 பேருக்கான உறுதி செய்யப்பட்ட வேலை வாய்ப்புகள் உண்டாகியுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

Aug 21, 2024 - 07:53
Aug 21, 2024 - 07:56
 0
ரூ.68,773 கோடி திட்டம், 1,06,800 பேருக்கு வேலை வாய்ப்புகள்.. உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடக்கம்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் விடுதியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு மேற்கொண்டார்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “கொடுத்த வாக்கினை காப்பாற்றுவது தான் நாணயமான ஆட்சி, கலைஞரின் நாணயமான ஆட்சி நடக்கிறது அதன் தலைவராக தமிழ்நாடு முதல்வர் திகழ்கிறார். அதற்கு எடுத்துக்காட்டு தான் முதலீட்டு மாநாடு. அதன்படி, 2021-23 வரை உலக முதலீட்டாளர் மாநாடு, மற்றும் முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு தமிழகத்திற்கு ஈர்த்த முதலீடுகள் அந்த கனவெல்லாம் நனவாகி மக்களுக்கு பயன் தரும் வகையில் வேலைவாய்ப்புகளாக உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.

முதலமைச்சர் வெளிநாட்டு பயணம், உலக முதலீட்டாளர் மாநாடு இதையெல்லாம் சேர்த்து, 19 நிறுவனங்கள் நேரடியாக தயாரிப்பு தொடங்கப்பட இருக்கின்றன. அதற்கான 17,616 கோடி ரூபாய்க்கான முதலீடுகளுக்கான துவக்க விழா நடைபெற உள்ளது. ஏறத்தாழ 65 ஆயிரம் நபர்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் இடப்பட்டு அனைத்தும் ஒப்புதல்களும் வழங்கப்பட்டு, 51,000 கோடி ரூபாய் அளவிற்கு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழா நடத்தப்பட உள்ளது. இது மிக, மிக சிறப்பான வரலாற்று சிறப்புமிக்க தருணம். ரூ.68,773 கோடி ரூபாய்க்கான திட்டத்தின் மூலம் 1,06,800 பேருக்கான உறுதி செய்யப்பட்ட வேலை வாய்ப்புகள் உண்டாகியுள்ளதாக” தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “தொழில்துறைக்கு ஏதுவான சூழலை தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றியுள்ளார். எந்த இக்கட்டான சூழலை ஒன்றிய அரசு நம்மீது திணித்தாலும் அதையெல்லாம் தகர்த்து, முதலீட்டாளர்களுக்கு ஒரு அற்புதமான சூழலை உருவாக்கி நிறுவனத்திற்கு தேவையான திறன் மிக்க மாணவர்களை உருவாக்கி வருகிறோம்.  இதன் மூலம் தொழில் வளம் மிகச்சிறப்பாக இருக்கிறது. 

தமிழகத்தில் இதுவரை கால் பதித்திராத மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் தமிழகத்திற்கு வரவுள்ளது. இதுவரை இல்லாத அளவில் 390 நாட்களுக்குள்ளாக ஒப்பந்தம் போடப்பட்டு நிறுவனம் அமைந்து, திறக்கப்பட்டு உற்பத்தி தொடங்கியுள்ளார்கள். அதுதான் முதலமைச்சருடைய சாதனை” என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow