மும்பையை திணறடித்த கிரிக்கெட் ரசிகர்கள்… பிரம்மாண்ட வரவேற்பில் திக்குமுக்காடிய இந்திய அணி வீரர்கள்!
டி20 உலகக் கோப்பையை வென்று மும்பை திரும்பிய இந்திய அணிக்கு ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
மும்பை: 2024 ம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை அமெரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தின. கடந்த மாதம் 29ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதின. இதில் இந்திய அணி த்ரில் வெற்றிப் பெற்று சாதனை படைத்தது. ஒருகட்டத்தில் தென்னாப்பிரிக்கா வென்றுவிடும் என்ற நிலையில் இருந்தது. ஆனால், பும்ரா, ஹர்த்திக் பாண்டியா ஆகியோரின் பவுலிங்கும், சூர்ய குமார் யாதவ் பிடித்த கேட்ச்சும் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணி உலகக் கோப்பையை வென்று அமர்க்களப்படுத்தியது.
அதேபோல் கபில்தேவ், தோனிக்குப் பிறகு உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றார். அதேநேரம், இந்த உலகக் கோப்பை தொடருடன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். மேலும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனையடுத்து புயல், மழை காரணமாக விமானங்கள் இயங்காததால் பார்படாஸிலேயே இருந்த இந்திய வீரர்கள், இன்று (ஜூலை 4) காலை தனி விமானத்தில் தயாகம் திரும்பினர்.
அதன்படி, வந்திறங்கிய இந்திய வீரர்களுக்கு விமான நிலையத்தில் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த வீரர்கள், அதன்பின்னர் மும்பை பறந்தனர். அங்கு இந்திய கிரிக்கெட் அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். மதியம் முதலே மும்பையின் சாலையெங்கும் கிரிக்கெட் ரசிகர்கள் கூடியதால், அந்த நகரமே ஸ்தம்பித்தது. திறந்தவெளி பேருந்தில் ஊர்வலமாக சென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்தனர்.
மேலும், கோலி, ரோஹித் ஷர்மா, பும்ரா, ஹர்த்திக் பாண்டியா போன்ற வீரர்களின் பெயரை கூறி உற்சாகமாக முழக்கமிட்டனர். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம், செல்ஃபி, போட்டோகள் என வழி நெடுகிலும் இந்திய அணி வீரர்களுக்கு வரவேற்பு கொடுத்தபடியே வான்கடே ஸ்டேடியத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றனர். பின்னர் மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் உலகக் கோப்பையுடன் வலம் வந்த டி20 சாம்பியன்கள், ஆடிப் பாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனையடுத்து ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்த 125 கோடி ரூபாய்க்கான காசோலை வீரர்களிடம் வழங்கப்பட்டது. அப்போது நடந்த வான வேடிக்கைகளும் மும்பை மாநகரை வண்ணமயமாக்கின. இறுதியாக இந்திய அணி வீரர்கள் மும்பையில் உள்ள தாஜ் நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்கச் சென்றனர். மும்பை பேரணியில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களை, இந்திய அணி வீரர்கள் தங்களது டிவிட்டர் பக்கங்களில் ஷேர் செய்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?