Formula 4 Car Race : Dhanush Congrats Udhayanidhi Stalin : சென்னையில் ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் நாளை (ஆகஸ்ட் 31) மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. சென்னை தீவுத்திடலை சுற்றிலும் உள்ள வட்ட வடிவ சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையில் தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்படவுள்ளது. தற்போது இதற்காக ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பந்தயத்திற்காக சாலையில் இருபுறங்களிலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து மன்றோ சிலை சாலையில் பந்தயத்தைக் காண வரும் பார்வையாளர்கள் சொகுசாக அமர்ந்து இதை கண்டுகளிக்கும் விதமாக மேடையும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தக் கார் பந்தயத்தை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் அமைதியான முறையில் நடத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தயத்துக்கு தடை விதிக்கக்கோரி தமிழக பாஜக செய்தி தொடர்பாளரான ஏ.என்.எஸ். பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னையில் ஃபார்முலா - 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தய சென்னையின் மதிப்பை உயர்த்தும் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X தளத்தில் பதிவிட்ட அவர், “இந்தியாவின் முதல் 'ஆன் ஸ்ட்ரீட் பார்முலா-4 சாம்பியன்ஷிப்' கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். இந்த அற்புதமான முயற்சி சென்னையின் மதிப்பை உயர்த்தும்” என கூறியுள்ளார்.
ஃபார்முலா - 4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் நடைபெறும் அரங்கில் தடை செய்யப்பட்ட பொருட்களின் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், “பிறருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தப் பொருளும் அரங்கிற்குள் அனுமதிக்கப்படாது. இந்த பொருட்களை சேமிப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை, மேலும் அவை அனைத்தும் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் பறிமுதல் செய்யப்படும், அவை திரும்பத் தரப்படமாட்டாது.
பிளேடுகள், கத்திகள், கத்தரிக்கோல், ஆயுதங்கள், பாக்கெட் கத்திகள், பெப்பர் ஸ்பிரே, பெரிய சங்கிலிகள் போன்றவை. ஆயுதங்கள் - துப்பாக்கிகள், கத்திகள், சுவிஸ் இராணுவ கத்திகள் போன்றவை லேசர்ஸ் - லேசர் லைட்டுகள்.
வழிகாட்டி நாய்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சேவை விலங்குகள் தவிர. ஒலி அமைப்புகள் - ஏர் ஹார்ன்கள், விசில் போன்ற சத்தம் எழுப்பக்கூடிய பொருட்கள், மெகாஃபோன்கள், இசைக்கருவிகள், போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள். தீப்பற்றக்கூடிய பொருட்கள் - தீப்பெட்டிகள், பட்டாசுகள், எளிதில் எரியக்கூடிய திரவங்கள், மதுபானம்.
மேலும் படிக்க: மகாராஷ்டிரா சுற்றுப்பயணம்... வாதவான் துறைமுக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி
வெளிப்புற உணவு மற்றும் பானங்கள் அனுமதிக்கப்படாது. கண்டைனர் / தண்ணீர் பாட்டில்கள் / கண்ணாடி பாட்டில்கள் - மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், சீல் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், திறந்த தண்ணீர் பாட்டில்கள், டின்கள், கேன்கள்” உள்ளிட்டவை அடங்கும்.