ஜெய் ஜெகந்நாதா.. பூரி ரத யாத்திரையில் கடலென திரண்ட பக்தர்கள் கூட்டம்..நெரிசலில் ஒருவர் பலி

ஒடிசா மாநிலத்தில் புகழ்பெற்ற 12ம் நூற்றாண்டை சேர்ந்த பூரி ஜெகந்நாதர் கோவிலில் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அலைகடலென மக்கள் திரண்டுள்ளதால் அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

Jul 8, 2024 - 11:10
Jul 8, 2024 - 11:43
 0
ஜெய் ஜெகந்நாதா.. பூரி ரத யாத்திரையில் கடலென திரண்ட பக்தர்கள் கூட்டம்..நெரிசலில் ஒருவர் பலி
puri rath yatra

பூரி ஜெகந்நாதர், அவரது சகோதரர் பாலபத்திரர், சகோதரி சுபத்ரா ஆகியோர் புதிதாக உருவாக்கப்பட்ட தேரில் வீற்றிருக்க பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க பிரமாண்ட ரத யாத்திரை நேற்று தொடங்கியது. இந்த விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ரதத்தை வடம் பிடித்து இழுத்தார். இதில் ஒரே நேரத்தில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்று ‛ஜெய் ஜெகந்நாத்' முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்தியாவில் புகழ்பெற்ற ரத யாத்திரையில் முதலிடத்தில் இருப்பது பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை தான். ஒடிசா மாநிலத்தின் அழகிய கடற்கரை நகரான பூரியில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த ஜெகந்நாதர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக ரத யாத்திரை நடக்கும்.

உலகப்புகழ் பெற்ற ரத யாத்திரையை காண இந்தியா மட்டுமின்றி பிற நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த ரத யாத்திரையின் சிறப்பு என்பது ஒரே நேரத்தில் 3 பிரம்மாண்ட தேர்கள் பவனி வருவது தான். அதாவது கோவில் மூலவர் ஜெகன்நாதர், அவரது சகோதரர் பாலபத்திரர், சகோதரி சுபத்ரா ஆகியோர் தனித்தனி தேர்களில் வலம் வருவார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த 3 தெய்வங்களுக்கும் தனித்தனியே தேர்கள் வடிவமைக்கப்படும். ஜெகன்நாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பாலபத்ராவுக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ராவுக்கு 43 அடி உயர தேபாதலனா என்ற பெயரிலான தேர்கள் பயன்படுத்தப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான பூரி ஜெகநாதர் கோவில் திருவிழா நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று ரத யாத்திரை தொடங்கியது. அதன்படி மூலவர் ஜெகன்நாதர் 45 அடி உயர 16 சக்கர தேரிலும், சகோதரர் பாலபத்திரர் 44 அடி உயர 12 சக்கர தேரிலும், சகோதரி சுபத்ரா 43 அடி உயர தேரிலும் வலம் வந்தனர். இந்த ரத யாத்திரையை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். அதன்பிறகு பக்தர்கள் 3 தேரையும் வடம்பிடித்து இழுத்தனர். மேளதாளங்கள், பக்தர்களின் ஜெய் ஜெகந்நாத் கோஷங்களுக்கு நடுவே 3 தேர்களும் பவனி வந்தது. 

இதனிடையே ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆண் பக்தர் ஒருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பூரியில் தலத்வாஜ தேர் பகுதியில் கட்டுக்கடங்காத அளவில் மக்கள் கூட்டம் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பூரி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் ஆண் பக்தர் மட்டும் மூச்சுத் திணறல் அதிகரித்து உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் தடுப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow