செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?.. அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் சராமரி கேள்வி

Senthil Balaji Bail : பென்டிரைவில் இல்லாத ஆவணம் திடீரென சேர்க்கப்பட்டது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதற்கு, பென் டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என செந்தில் பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது என அமலாக்கத்துறை பதில் வாதம் வைத்தது.

Jul 24, 2024 - 17:04
Jul 25, 2024 - 10:07
 0
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?.. அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் சராமரி கேள்வி
Senthil Balaji Case in Supreme court

Senthil Balaji Bail : சட்ட விரோத பண பறிமாற்ற வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்றவற்றில் தனது பங்கு எதுவும் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறது, அது குறித்து முதலில் உங்கள் பதில் என்ன? என அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.நாங்கள் கேட்பது மிக சாதாரண கேள்வி. அதற்கு சுற்றி வளைக்காமல் நேரடியான சாதாரண பதிலைத்தான் எதிர்பார்க்கிறோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறையில் நடத்துனர், ஓட்டுனர், மெக்கானிக் உள்ளிட்ட வேலைகளை வாங்கித்தருவதாக கூறி 81 பேரிடம் பண மோசடி செய்ததாக அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி(Senthil Balaji) மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமலே இருந்தது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு தேவசகாயம் என்பவர் தன் மகனுக்கு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பழனி என்பவரிடம் ரூ.2.60லட்சம் ஏமாந்ததாகக் கூறி புகார் அளித்திருந்தார். ஆனால் அந்த புகாரில் செந்தில்பாலாஜியின் பெயர் இடம் பெறவில்லை. இருந்தாலும் அதிமுக தலைமைக்கு போக்குவரத்துறையில் மோசடி செய்வது, திமுகவினருடன் நெருக்கம் காட்டுவது என செந்தில்பாலாஜி மீது பல்வேறு புகார்கள் பறந்ததாக போயஸ் கார்டன் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவரது அமைச்சர் பதவியை பறித்தார் ஜெயலலிதா.  

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அமமுகவிற்கு சென்று பின்னர் திமுகவில் இணைந்து அமைச்சரானார் செந்தில் பாலாஜி.திமுக ஆட்சிக்கு வந்ததும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் செந்தில் பலாஜியின் உதவியாளர் சண்முகம், சகாயராஜன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் “பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கொடுக்கப்பட்டு, சமரசமாக சென்றனர்’ என்று மனுதாக்கல் செய்தனர். 

இதை ஏற்று செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இனி சிக்கலே இல்லை என்று நினைத்திருந்த செந்தில் பாலாஜிக்கு அடுத்த தலைவலி ஆரம்பமானது. ஊழல் தடுப்பு அமைப்பு, அமலாக்கத்துறை போன்றவை செந்தில்பாலாஜியின் உட்பட 4 பேரின் விடுவிடுப்பை எதிர்த்து 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து செந்தில்பாலாஜி மீதான பண மோசடி வழக்கை விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவின் பேரில் கடந்த 2021ஆம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. மறுபுறம், செந்தில்பாலாஜி(Senthil Balaji Case) மீதான வழக்குகளை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து செந்தில்பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கில் இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். 

இந்த வழக்கு 2 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு பல ஆதாரங்களை திரட்டி ஜூன் 2023 இதே நாளில் செந்தில்பாலாஜியை கைது செய்தது அமலாக்கத்துறை... கைது செய்ய முற்பட்டபோது தனக்கு நெஞ்சுவலி வந்ததாக செந்தில்பாலாஜி தெரிவித்தும் குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர் அமலாக்கத்துறையினர். ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி ஜூன் 21 ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சில வாரங்கள் ஓய்விற்குப் பிறகு ஜூலை 17 ஆம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி அவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

அவரது ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார் செந்தில் பாலாஜி. சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதிடும்போது, "செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிறது. உடல்நிலை மோசமாகியிருக்கிறது. இதய அறுவை சிகிச்சையும் நடந்திருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டார்கள். ஆனால், அமலாக்கத்துறை என்ன விசாரிக்கிறார்கள், எப்போது விசாரிப்பார்கள் என்பது எதுவுமே தெரியவில்லை. அவர்கள் எப்போது விசாரித்து முடிப்பார்கள் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்று கூறினார்.

இதையடுத்து, அமலாக்கத்துறை தரப்பில் வாதாடுவதற்கு அவகாசம் கேட்கப்பட்டிருந்தது. எனவே, இந்த வழக்கு விசாரணையை 24ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்தவகையில், இன்றைய தினம் இன்று செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்றவற்றில் தனது பங்கு எதுவும் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறது, அது குறித்து முதலில் உங்கள் பதில் என்ன? என அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். எங்களது இந்த கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்காமலேயே இருக்கிறீர்கள். 

நாங்கள் கேட்பது மிக சாதாரண கேள்வி. அதற்கு, நாங்கள் உங்களிடம் சுற்றி வளைக்காமல் நேரடியான சாதாரண பதிலைத்தான் எதிர்பார்க்கிறோம். தற்போதெல்லாம் நாங்கள் வழக்கறிஞர்களிடம் கேள்வி கேட்டால், அதை தனிப்பட்ட முறையில் விரோதமாக எடுத்துக் கொள்கிறீர்கள்.

செந்தில் பாலாஜி விவகாரத்தில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்ற ஆதாரங்கள் பற்றி நாங்கள் கடந்த 15 நிமிடங்களாக தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம். ஆனால் நீங்கள் அதற்கு பதில் அளிக்காமல் உள்ளீர்கள். கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்ற ஆவணங்கள் தொடர்பான தடையவியல் பரிசோதனை ஆவணங்கள் எங்கே? நீங்களும் நானும் நிபுணர்கள் இல்லை. தடயவியல் நிபுணர்கள் தான் அதற்கு பதில் கூற வேண்டும். அந்த பதிலைத்தான் நாங்கள் எங்கே எனக் கேட்கிறோம்.

இன்று பதில் வழங்க இயலவில்லை என்றால், நாளை தள்ளி வைக்கிறோம். பதில் கூறுங்கள்” என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து அமலாக்கத்துறை தரப்பில்  தயார் செய்யப்பட்ட குறிப்பை நீதிபதிகளுக்கும், செந்தில் பாலாஜி தரப்புக்கும் வழங்கினர். அதற்கு, “அமலாக்கத்துறை குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறது” என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சித்தார் லூத்ரா குற்றச்சாட்டினார். இதனையடுத்து விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow