ஆமை வேகத்தில் மத்திய அரசின் திட்டங்கள்.. திமுக அரசை குற்றம்சாட்டிய அண்ணாமலை!

''தமிழக மக்களை 30 வருடங்களாக திராவிட கட்சிகள் ஏமாற்றி வைத்திருக்கிறார்கள். தமிழக மக்களிடம் திராவிட கட்சிகள் மாறிமாறி வீண் விஷ விதைகளை விதைத்து வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் பாஜக வந்தால் அன்று தான் உண்மையான ஜனநாயக ஆட்சி அமையும்'' என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Aug 22, 2024 - 21:53
Aug 23, 2024 - 10:15
 0
ஆமை வேகத்தில் மத்திய அரசின் திட்டங்கள்.. திமுக அரசை குற்றம்சாட்டிய அண்ணாமலை!
Annamalai And MK Stalin

மதுரை: மதுரையில் மாநகர் பாஜக சார்பில், நரேந்திர மோடி 3வது முறையாகப் பிரதமராக வாக்களித்து வாய்ப்பளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் மத்திய அரசின் பஜ்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், ''தமிழகம் திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து வெளி வந்துள்ளது என்பது 2024 நாடாளுமன்ற தேர்தலின் மூலம் தெள்ள தெளிவாக தெரிகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 37% இருக்கும் வாக்கு வங்கி 2026 சட்டப்பேரவை தேர்தலில் 100% ஆக இருக்கும். அதற்கு தமிழக மக்கள் நம்பக்கம் இருக்கிறார்கள். அதற்காக வரும் நாட்களில் கடுமையாக உழைக்க வேண்டும்.  கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் நானும், மத்திய அமைச்சர்களும் கலந்துகொண்டதற்கு அதிமுக விமர்சனம் செய்தார்கள்.  எதிரியாக இருந்தாலும் தகுதியான எதிரியை தேர்ந்தெடுத்து மதிப்பளிப்பேன் என்பதற்கு கலைஞர் நூற்றாண்டு வெளியிட்டு விழாவே சாட்சி. எங்களை திமுக எதிரியாக ஏற்றுக்கொண்டது. 

தமிழகத்தின் வருங்காலம் எங்கே இருக்கின்றது; எங்கே செல்ல வேண்டும் என்று திமுகவினருக்கு தெரியும். எம்.ஜி.ஆர் நாணய வெளியீட்டு விழாவை 2 ஆண்டுகளாக பூட்டி வைத்தவர்கள் அதிமுகவினர். 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழாவில் மோடி அவர்கள் கண்டிப்பாக வந்திருக்க வேண்டும். எம்ஜிஆர் நாணய வெளியீட்டு விழாவிற்கு வந்தவர்கள் மோடி பக்கம் சென்று விடுவார்கள் என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரை அழைக்கவில்லை.

எம்ஜிஆர் நாணய வெளியீட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி நாணயத்தை வெளியிட்டால் தமிழகத்தை தவிர வேறு எங்கும் தெரியுமா? ஜம்மு-காஷ்மீரில் தெரியுமா? ஜார்கண்டில் தெரியுமா? உத்தரபிரதேசத்தில் தெரியுமா? இல்லை ஒரிசாவில் தெரியுமா? இதேபோல் செல்லூர் ஏரியாவை தாண்டினால் செல்லூர் ராஜு யாரு என்று மக்களுக்கு தெரியுமா? ஆர்.பி.உதயகுமாரை மதுரை தாண்டினால் யாருக்காவது தெரியுமா?

மதுரையில் இரண்டு தாதா உள்ளார்கள் ஒருவர் மூர்த்தி. மற்றொருவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். மதுரை மேயர் அங்கு ஒரு கால், இங்கு ஒரு கால் வைத்து வருகிறா. வடிவேலு காமெடி போல தென்னமரம் சின்னத்துல ஒரு குத்து, பனை மரச்சின்னதுல ஒரு குத்து போல மேயர் செயல்பாடு உள்ளது. மதுரையில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. வரிகட்டியும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் அவதி படுகின்றனர்.

தமிழக மக்களை 30 வருடங்களாக திராவிட கட்சிகள் ஏமாற்றி வைத்திருக்கிறார்கள். தமிழக மக்களிடம் திராவிட கட்சிகள் மாறிமாறி வீண் விஷ விதைகளை விதைத்து வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் பாஜக வந்தால் அன்று தான் உண்மையான ஜனநாயக ஆட்சி அமையும்.

மதுரைக்கு எய்ம்ஸ் வர வேண்டும் என்பது பிரதமர் மோடி விரும்பி எடுத்த முடிவு. மதுரை எய்ம்ஸ் என்பது ரூ.250 கோடி, ரூ.300 கோடி என மற்ற மாநிலங்களில் அமைத்த எய்ம்ஸ் போன்றது அல்ல. ஜப்பான் நிதியுதவி உடன், ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் மதுரை எய்ம்ஸ் அமைய உள்ளது. அனைத்து மத்திய அரசு திட்டங்களும் விரைவில் தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது எனப் பொறுக்கித் தனமான அரசியல் செய்கிறது திமுக.  மற்ற மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்கள் வேகமாக நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஏன் மத்திய அரசின் திட்டங்கள் மெதுவாக செல்லவேண்டும்?

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று, பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். அதற்கு நாம் இன்னும் உத்வேகத்தோடு உழைக்க வேண்டும்'' என்று அண்ணாமலை கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow