கருணாநிதியை சண்டாளன் என கூறுவதா?... சீமான் மீது காவல் ஆணையரிடம் புகார்...
கருணாநிதியை புனிதர் ஆக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின். கருணாநிதியின் அரசியல் வருகைக்குப்பின், தீய சக்தியின் ஆட்சியும் துவங்கியது.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த வழக்கறிஞர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகனை கைது செய்ததற்கு எதிராக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைகாட்சிகளுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், “சாட்டை துரைமுருகன் என்னைவிட அதிகமாக பேசவில்லை; அவதுாறாகவும் பேசவில்லை. கருணாநிதியை விமர்சித்து ஏற்கனவே இருந்த பாட்டைத்தான் பாடினார். பாடலை எழுதியவர், பாடியவரை விட்டு விட்டு, மீண்டும் எடுத்து வந்து பாடியவரை கைது செய்துள்ளனர்.
கருணாநிதி என்ன இறைத்துாதரா, இயேசுவா அல்லது பகவான் கிருஷ்ணனா? 'கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி; சதிகாரன் கருணாநிதி; சண்டாளன் கருணாநிதி' என நான் பாடுகிறேன். கருணாநிதி பற்றிய பாடலை பாடுகிற என்னை கைது செய்து பாருங்கள். பிள்ளைப் பூச்சிகளைப் பிடித்து விளையாடும் நீங்கள், தேள், பாம்பு, சிங்கம், புலியோடு விளையாட முடியுமா?
அதிகாரம் வந்தபின், கருணாநிதியை புனிதர் ஆக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின். கருணாநிதியின் அரசியல் வருகைக்குப்பின், தீய சக்தியின் ஆட்சியும் துவங்கியது. ஊழல், கொலை, கொள்ளை, லஞ்சம், சாராயம் உள்ளிட்டவை, அவரது ஆட்சியில்தான் வந்தது” என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இருபிரிவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பிரவீன், "அழகு முத்துகோன் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பாட்டு பாடியுள்ளார். அவதூறாக பேசிய சீமான மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளோம்.
சண்டாளன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என சீமான் சொல்லியுள்ளார். ஆனால் அவரது இயக்கத்தில் வெளிவந்த 'தம்பி' என்ற படத்தில் ஒரு காமெடியில் சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருப்பார். அப்போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சண்டாளன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. இனி இந்த வார்த்தையை பயன்படுத்த மாட்டேன் என தெரிவித்தார். ஆனால் தற்போது கலைஞரை அதே வார்த்தையில் அவதூறு கூறியுள்ளார். சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.
பின்னர் திமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த நடராஜன் என்பவரும் புகார் கொடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குண்டத்தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
What's Your Reaction?