வயநாடு துயரம்.. மண்ணோடு மண்ணாகி போன கிராமம்.. தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்

Wayanad Landslide Death Toll in Kerala : காட்டாற்று வெள்ளத்துடன் மலை உச்சியில் இருந்து அடித்து வரப்பட்ட பல்லாயிரக்கணக்கான ராட்சத பாறைகள் மற்றும் ராட்சத மரங்கள் வயநாட்டில் ஒரு கிராமத்தையே சேறும் சகதியும் நிறைந்த மண்மேடாக மாற்றியுள்ளது.

Jul 31, 2024 - 08:52
Jul 31, 2024 - 12:18
 0
வயநாடு துயரம்.. மண்ணோடு மண்ணாகி போன கிராமம்.. தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்
Wayanad Landslide Death Toll in Kerala

Wayanad Landslide Death Toll in Kerala : வயநாட்டில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பல நூறு உயிர்களை காவு வாங்கியுள்ளதால் ஒட்டுமொத்த கேரளா மாநிலத்தையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மண்டைகை மலையில் கொட்டித்தீர்த்த பெருமழையில் மலையே உருக்குலைந்து கீழ்நோக்கி சரிந்திருக்கிறது. நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து 5.30 வரை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவுகளால் ஒரு கிராமமே முற்றிலும் சிதைந்து மண்ணோடு மண்ணாக புதையுண்டு போனது.

மண்டகை, சூரல் மலை ஆகிய பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்த தடமே தெரியாது அளவுக்கு மண்ணில் புதையுண்டு போனது. நிலச்சரிவுகளில் சிக்கியவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சடலமாக மீட்டுள்ளனர். மேலும் பலரின் நிலைமை என்னவென்றே தெரியாத நிலை நீடிக்கிறது. காயமடைந்தவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

காட்டாற்று வெள்ளத்துடன் மலை உச்சியில் இருந்து அடித்து வரப்பட்ட பல்லாயிரக்கணக்கான ராட்சத பாறைகள் மற்றும் ராட்சத மரங்கள் அந்த பகுதியையே புரட்டிப் போட்டிருக்கிறது‌.பல இடங்களில் பாலங்கள் அடித்துச் சென்றதால் மீட்புக் குழுக்கள் அந்த இடங்களுக்கு செல்ல முடியாத சூழல் நிலவியது. இதன் காரணமாக விமானப்படை வரையில் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150ஆக உயர்ந்திருக்கிறது. மருத்துவமனையில் 300 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாயமான நூற்றுக்கணக்கானோரை தேடும் பணி தொடங்கியுள்ளது.

நிலச்சரிவில் சிக்கியவர்களில் உயிரோடு காயங்கள் இன்றி மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மண் முடிய பகுதிகளில் இருந்து தோண்டத் தோண்ட  சடலங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 50க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளர் காணப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

கொடூரமாக சிதைத்து கிடக்கும் மனித உடல்களை பார்க்கவே முடியவில்லை. வீடுகள் இருந்த இடத்தில் பாறைகள் தான் இருக்கிறது. மண்டகை கிராமம் இருந்த தடமே இல்லை என கண்ணீர் வடிக்கின்றனர் உயிரிழந்தவர்களின் உறவினர்கள்.இப்படி ஒரு பேரிடரை எங்கும் பார்த்ததில்லை. தன்னார்வலர்கள் முதல் ராணுவம் வரை பல்லாயிரக்கணக்கானவர்கள் களத்தில் இருக்கிறோம். அணுக முடியாத பகுதிகளில் பாதிப்பு இன்னும் அதிகமாக காணப்படுகிறது என்று மீட்புக்குழுவினர் கூறியுள்ளனர்.

இதனிடையே வயநாடு சென்ற தமிழ்நாடு அரசின் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கேரளா மாநில அரசின் மூத்த அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனை தொடர்ந்து வயநாடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இன்று முதல் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு படி தமிழ்நாடு அரசின் பேரிடர் மீட்பு படை,  தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு மற்றும் மருத்துவ குழுவினர் இன்று அதிகாலை 4 மணிக்கு வயநாடு சென்றடைந்தனர். இன்று முதல் தமிழக பேரிடர் மீட்புப்படையினரும் மீட்பு பணியில் இணைய உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow