TVK Vijay: வயநாடு நிலச்சரிவு... தவெக தலைவர் விஜய் இரங்கல்... அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை!

TVK Vijay Condolence for Wayanad Landslide Death : கேரள மாநிலம் வயநாடு நிலச்சரி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Jul 30, 2024 - 20:52
Jul 31, 2024 - 16:08
 0
TVK Vijay: வயநாடு நிலச்சரிவு... தவெக தலைவர் விஜய் இரங்கல்... அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை!
TVK Vijay Condolence for Wayanad Landslide Death

TVK Vijay Condolence for Wayanad Landslide Death : கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இதுவரை 80க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால், வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த பலரும் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். இந்த நிலச்சரிவு காரணமாக கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

பாதுகாப்பு படையினர், பேரிடர் மீட்பு குழுவினர், துணை ராணுவ வீரர்கள், தன்னார்வளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் அவ்வப்போது அப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், மீட்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. முக்கியமான சாலைகள், பாலங்கள் என பாதிக்கப்பட்ட இடங்களை சென்றடையும் அத்தனை வழித்தடங்களும் சின்னாப்பின்னமாகியுள்ளன. இதனால் காணாமல் போனவர்களை தேடுவதில் சிரமம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் மீட்பு பணிகள் தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகின்றன.

வீடுகளை இழந்த ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே தமிழ்நாடு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் 5 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். அதேபோல் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வரிசையில் தவெக தலைவரும் நடிகருமான விஜய், வயநாடு நிலச்சரிவு குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மீட்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் வழங்க அரசு அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன் என விஜய் பதிவிட்டுள்ளார். தவெக தலைவர் விஜய்யின் இரங்கல் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய்க்கு கேரளாவில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் தி கோட் படப்பிடிப்புக்காக கேரளா சென்றிருந்த விஜய்க்கு, ரசிகர்கள் தாறுமாறான வரவேற்பு கொடுத்தனர். அதேபோல், விஜய்யின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் கேரளாவில் ரசிகர்கள் கொண்டாடித் தீர்ப்பது வழக்கம். இந்நிலையில் விரைவில் அரசியலுக்கு வர முடிவு செய்துள்ள விஜய், வயநாடு நிலச்சரிவு சம்பவத்துக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அதேபோல், மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், வால்பாறையிலும் நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன. தங்களது அன்புக்குரியவர்களையும், வீடு வாசல், உடைமைகளையும் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கைப் பேரிடர்கள் வழக்கமான நிகழ்வாகிவிட்டன. இதன் தாக்கத்தை புரிந்துகொண்டு நாம் அனைவருமே கூட்டாகச் செயலாற்ற வேண்டியது மிக அவசியம். 

ஆபத்துகள் நிறைந்த கடினமான சூழ்நிலையில் தங்களது உயிரைப் பணயம் வைத்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கும், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் மாநில அரசுகளின் ஊழியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தும்படி மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow