மண் மூடிப்போன வயநாடு..கேரளாவில் நீடிக்கும் ரெட் அலர்ட் ஸ்டாலின் ரூ.5 கோடி நிவாரணம்

CM Stalin Announce Relief on Wayanad Landslides : கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண நிதியாக தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Jul 30, 2024 - 13:22
Jul 30, 2024 - 13:33
 0
மண் மூடிப்போன வயநாடு..கேரளாவில் நீடிக்கும் ரெட் அலர்ட் ஸ்டாலின் ரூ.5 கோடி நிவாரணம்
CM Stalin Announce Relief on Wayanad Landslides

CM Stalin Announce Relief on Wayanad Landslides : வயநாடு பகுதியில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கிட  தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண நிதியாக தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மீண்டும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  

கேரள மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.மண்ணில் புதையுண்டவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேசியதோடு, அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தேன் என்றார். மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ2 லட்சம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தமது இரங்கல் செய்தியில், கேரளா நிலச்சரிவு நிகழ்வு பெரும் துயரத்தைத் தருகிறது. நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிலச்சரிவில் இன்னும் பலர் சிக்கி இருப்பதாகவும் அறிந்தேன். இந்த துயரமான தருணத்தில் சகோதர மாநிலமான கேரளாவுக்கான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழ்நாடு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து மாண்புமிகு கேரள மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாயினை வழங்கிடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow