விக்கிரவாண்டி தொகுதியில் அன்னியூர் சிவா அபார வெற்றி.. பாமக 2ஆம் இடம்.. டெபாசிட் பறிகொடுத்த நாதக

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளார் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா டெபாசிட்டை பறிகொடுத்துள்ளார்.

Jul 13, 2024 - 17:26
 0
விக்கிரவாண்டி தொகுதியில் அன்னியூர் சிவா அபார வெற்றி.. பாமக 2ஆம் இடம்.. டெபாசிட் பறிகொடுத்த நாதக
Vikravandi by election result


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம்தமிழர் கட்சியில் அபிநயா மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர். 

தமிழகத்தில் 2026ல் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு விக்கிரவாண்டி இடைதேர்தல் முன்னோட்டம் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருவதால் தமிழகமே இந்த தொகுதியின் வெற்றி நிலவரத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தமுள்ள 2,37,031 வாக்காளர்களில் 195495 பேர் வாக்களித்தனர். இதன்படி 82.48 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. 

இன்று காலை வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை துவங்கியதிலிருந்தே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பல ஆயிரம் வாக்குகள் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 10 வாக்குகள் கிடைத்தன. நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 2 வாக்குகள் பெற்றார்.

தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 20 சுற்றுகளாக வாக்கு எண்ணப்பட்டது. முதல் சுற்று முதலே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வந்தார். 20-வது சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296​​ வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா 10,602 வாக்குகள் பெற்றார். நோட்டாவில் 853 வாக்குகள் பதிவானது. 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் ஆளுங்கட்சியான திமுக தொகுதியை தக்க வைத்துக்கொண்டது. விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உட்பட 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் புகழேந்தி வெற்றி பெற்றார். அவர் 93,730 வாக்குகள் பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 84,157 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளரை விட திமுகவின் புகழேந்தி 9573 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த முதல் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளார் கந்தசாமி 2921 வாக்குகள் பெற்று டெபாசிட்டை பறிகொடுத்தார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் ஷீபா ஆஸ்மி 8616 வாக்குகள் பெற்று டெபாசிட்டை பறிகொடுத்தார். மூன்றாவது முறையாக டெபாசிட்டை பறிகொடுத்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் அபிநயா. 

தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா, நாங்கள் டெபாசிட் இழந்ததாகவே இருக்கட்டும். இந்த வெற்றி உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்று திமுக வேட்பாளரைக் கேளுங்கள். கடந்த தேர்தலைவிட கூடுதலாக நாங்கள் 2 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளோம். காணை பகுதியில் திமுகவினர் இளம் வாக்காளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தனர். இது தேர்தலே இல்லை. திமுகவினர் ஏலம் எடுத்துள்ளனர். வருங்காலங்களில் இடைத் தேர்தலை ஏலம் விட்டுவிடுங்கள். இதெல்லாம் தெரிந்துதான் அதிமுக பின்வாங்கியது. இது பண நாயகத்தின் வெற்றி; ஜனநாயகத்தின் மரணம் என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow