அரசியல்

Selvaperunthagai : விஜய்யை பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு; விஜயதரணி சொன்னதை கேட்கவில்லை - செல்வப்பெருந்தகை

Selvaperunthagai About Vijay Met with Rahul Gandhi : ராகுல் காந்தியை நடிகர் விஜய் சமீபத்தில் சந்திக்கவே கிடையாது என்றும் நீண்ட காலத்திற்கு முன்புதான் சந்தித்தார் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Selvaperunthagai : விஜய்யை பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு; விஜயதரணி சொன்னதை கேட்கவில்லை - செல்வப்பெருந்தகை
நடிகர் விஜய் மற்றும் செல்வப்பெருந்தகை

Selvaperunthagai About Vijay Met with Rahul Gandhi : மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தொடர்ந்து பேசிய செல்வப்பெருந்தகை, “நம்முடைய கட்சி கருத்து சுதந்திரம் உடைய கட்சி. நீங்கள் சொல்லும் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இருந்தால் அந்த கருத்து ஏற்றுக்கொள்ளப்படும். ஏதேனும், குறை இருந்தால் தெரிவிக்கும் உங்களுக்கு உண்டு. அதை சரிசெய்து கொள்ள வேண்டும். அதுதான் நல்ல தலைமை.

காங்கிரஸ் இல்லாத தேசத்தை பார்க்க போகிறோம் என ஒருவர் தெரிவித்திருந்தார். ஆனால், இன்றைக்கு அவர் எங்குபோய் முடிய போகிறார் என்று தெரியாமல் சுத்திக் கொண்டிருக்கின்றார். ராமர் கோயில் கட்டி விட்டோம் என மார்தட்டிக் கொண்டிருந்தார் மோடி. ஆனால், ராமர் கோவில் கட்டிய தொகுதியிலேயே படுதோல்வி பாஜக அடைந்தனர். தேர்தலில் முதல் மூன்று சுற்றுகளில் மோடியை மக்கள் தண்ணீர் குடிக்க வைத்தனர்.

இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என நாம் தமிழர் கட்சியினர் கூறுகின்றனர். நேற்றைக்கு ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம் அடுத்தது நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்று சொல்கின்றார்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குரல் கொடுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று கூறுகின்றார்கள்.

இவர்கள் எல்லாம் ஆட்சி அமைப்போம் என்று கூறும் பொழுது நாம் ஏன் ஆட்சி அமைப்போம் என்று கூறக்கூடாது? ஆனால் இந்த தேசத்திற்காக உழைத்து இந்த தேச வளர்ச்சிக்காக பாடுபட்ட நாம் என்றைக்கும் நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டும்.

பாஜக தலைவர் அண்ணாமலை நாம் அடிமையாக இருக்கின்றோம் என நம்மை விமர்சித்துள்ளார். தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று வந்திருக்கின்றது. நாம் ஒருபோதும் அடிமையாக இருந்தது கிடையாது” என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “விஜயதாரணிக்கு பாஜகவில் அனைத்து கதவுகளும் இழுத்து மூடப்பட்டிருக்கின்றது. அவர், காங்கிரசை விட்டு செல்வதற்கு முன்பு, அரை மணி நேரம் ஒரு இடம் பேசினேன், அறிவுரை வழங்கினேன். பாஜகவிற்கு செல்வதாக தகவல் வருகிறது, இது தவறான முடிவு என தெரிவித்தேன். ஆனால் அதை அவர் கேட்கவில்லை. அதற்கான பலனை தற்போது அனுபவிக்கின்றார்

நடிகர் விஜயை கட்சி ஆரம்பிக்க சொன்னது ராகுல்காந்தி தான் என விஜயதரணி கூறிய கருத்துக்கு பதில் அளித்தவர், “தலைவர் ராகுல் காந்தியை நடிகர் விஜய் சமீபத்தில் சந்திக்கவே கிடையாது. நீண்ட ஆண்டுகளுக்கு முன்புதான் சந்தித்தார் வேண்டுமென்றால் தலைவர் ராகுல் காந்தியிடம் கேட்டு பதில் சொல்கின்றேன்” என்றார்.