TVK Maanadu: விஜய்யின் Ramp Walk... 6 அதிநவீன கேரவன்கள்... பிரம்மாண்டமாக மாறிய தவெக மாநாட்டுத் திடல்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தவெக மாநாடு குறித்து தற்போது வெளியான லேட்டஸ்ட் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விழுப்புரம்: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாடு, நாளை நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி சாலையில் நாலை மாலை 4 மணிக்கு தொடங்கும் தவெக மாநாடு, இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாநாட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மாநாடு நடைபெறும் திடலில் காவல்துறையின் அறிவுறுத்தல்படி தற்போது வரை 50,000 இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
6 முதல் 8 லட்சம் பேர் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 85 ஏக்கரில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 5 நுழைவு வாயில்கள் வழியாக தொண்டர்கள் உள்ளே வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், மாநாடு முடிந்ததும் அனைவரும் வெளியேறுவதற்காக 15 வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 217 ஏக்கரில் மாநாட்டு திடலின் இருபுறமும் 4 கார் பார்க்கிங் வசதிகள் உள்ளன. அவைகளில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 பார்க்கிங் இடங்களும், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பார்க்கிங் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பார்க்கிங் இடங்களில் கார், வேன், பேருந்து என 5000க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், மாநாட்டு திடலின் முகப்பு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநாடு திடலில் என்ட்ரியானதும் முதலில் கேரவன் செல்லும் விஜய், அதன்பின்னரே மேடைக்கு செல்லவுள்ளார். விஜய், அவரது குடும்பத்தினர், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்காக 6 அதிநவீன கேரவன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கேரவனில் இருந்து வெளியே வந்ததும், முதல் நிகழ்ச்சியாக மாநாட்டுத் திடலில் நிறுவப்பட்டுள்ள 100 அடி உயர கம்பத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றுகிறார் தலைவர் விஜய். ரிமோட் மூலம் இந்த கொடி ஏற்றப்படும் எனவும், இது உயரே சென்று பறப்பதற்கு 5 நிமிடங்கள் வரை ஆகும் என்றும் சொல்லப்படுகிறது. அதனை தொடர்ந்து தொண்டர்களை சந்தித்தபடி மேடைக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கொடி ஏற்றி முடிந்ததும் விஜய் மேடைக்குச் செல்வதற்காக, மாநாட்டுத் திடலின் நடுவே 200 அடி நீளத்திற்கு நடை மேடை அமைக்கப்பட்டுள்ளது.
அதன் இருபுறமும் தொண்டர்களும் ரசிகர்களும் அமர்ந்திருக்க, அந்த நடை மேடையில் ராம்ப் வால்க் செல்லவுள்ளாராம் விஜய். அதன் தொடர்ச்சியாக மாநாடு தொடங்கும் என்றும், முக்கியமான நிர்வாகிகள் பேசி முடித்த பின்னர், விஜய் உரை நிகழ்த்துவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக விஜய்யின் உரை 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அதேநேரம் விஜய் என்ன பேசப் போகிறார் என்பது தான் பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
What's Your Reaction?