ரோடு ஷோ கேன்சல்... விஜய்க்கு கட்டுப்பாடு... தவெக மாநாட்டுத் திடலை கட்டுக்குள் கொண்டுவந்த காவல்துறை!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை (அக்.27) நடைபெறவுள்ள நிலையில், அங்கு விஜய்யின் ரோடு ஷோவுக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். அதேபோல் நெடுஞ்சாலையில் உள்ள பேனர்கள் அகற்றப்பட்டதால், போலீஸாருடன் தவெக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்: விஜய்யின் தமிழக வெற்றிக் கழக நாளை மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்த நிலையில், மாநாடு நடைபெறும் மைதானத்தை காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். மாநாடு நுழைவாயில் பகுதியினை காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதை அடுத்து, அங்கு வலம் வரும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் பாதுகாப்பு பணியில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில், விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி திஷா மித்தல் மேற்பார்வையில் இந்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாட்ச் உள்ளிட்ட 10 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 15 கூடுதல் எஸ்பிக்கள், 50க்கும் மேற்பட்ட டிஎஸ்பிக்கள், 200க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் போக்குவரத்து சரி செய்யும் பணியில், 600க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தவெக பேனர்களை, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அகற்றினர். எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் ஏன் பேனர்களை அகற்றுகிறீர்கள்? என தவெக நிர்வாகிகள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இன்னொரு பக்கம், மாநாட்டுக்கு வரும் எந்த வாகனத்தையும் டாஸ்மாக் அருகே நிறுத்தக்கூடாது எனவும், மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது என்றும் தவெக தலைமை எச்சரித்துள்ளது.
இந்நிலையில், ரோடு ஷோ நடத்த வேண்டாம் என விஜய்க்கு காவல்துறை அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கு வரும்போது ரோடு ஷோ நடத்தினால், போக்குவரத்து நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் ரோடு நடத்த வேண்டாம் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், இன்றிரவு பாண்டிச்சேரி சென்றுவிட்டு, அங்கிருந்து மாநாடு நடைபெறும் இடத்திற்கு வர வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே மாநாட்டு பாதுகாப்பு பணிகளுக்காக, கேரளாவிலிருந்து 50க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் வி சாலைக்கு வருகை தந்துள்ளனர்.
What's Your Reaction?