சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை... புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... வானிலை மையம் எச்சரிக்கை!
கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னை உட்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாகவே சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. அவ்வப்போது மழை பெய்தாலும் வெயில் கொஞ்சம் கூட குறையாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. எழும்பூர், ராயப்பேட்டை, அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, தியாகராய நகர், கோடம்பாக்கம், சூளைமேடு, வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர், நுங்கம்பாக்கம், பெரம்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.
அதேபோல், சென்னை புறநகர் பகுதிகளான குன்றத்தூர், மாங்காடு, பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய மேற்கு அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 5-ம் தேதி காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்தது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளான கோட்டூர், நீடாமங்கலம், கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சம்பா நாற்று விடும் பணி, நேரடி நெல் விதைப்பு பணிகளை தொடங்க இந்த மழை ஏதுவாக இருக்கும் என அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மானாவாரி பயிராக கம்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் இந்த கனமழை காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சையில் சுமார் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாரியம்மன் கோவில், சூரக்கோட்டை, புதிய பேருந்து நிலையம், திருமலை சமுத்திரம், திருக்கானூர்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மழைநீர் வெள்ளம் போல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்த கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியொடு பாதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு கனமழை, நிலச்சரிவை தொடர்ந்து ஆந்திரா, தெலங்கான மாநிலங்களும் மழையால் கடும் பாதிப்படைந்துள்ளன. இதனால், சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
What's Your Reaction?