திரும்பும் 2016 வரலாறு.. கூட்டணி குளத்தில் கல் எறிந்த விசிக திருமாவளவன்.. மநகூ மீண்டும் உதயம்?

2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் போல திருமாவளவன் மீண்டும் புதிய கூட்டணியை உருவாக்க முயற்சி செய்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதற்கான முதற்படியாகவே அரசுக்கு எதிராக மது ஒழிப்பு மாநாடு நடத்த உள்ளதாகவும் கூறுகின்றனர் தமிழக அரசியல் ஆய்வாளர்கள்.

Sep 11, 2024 - 07:37
 0
திரும்பும் 2016 வரலாறு.. கூட்டணி குளத்தில் கல் எறிந்த விசிக திருமாவளவன்.. மநகூ மீண்டும் உதயம்?
vck admk allaiance

அரசியலில் நிரந்த பகைவனும் இல்லை.. நிரந்தர நண்பனும் இல்லை என்பார்கள். தமிழ்நாட்டு அரசியலில் இது அவ்வப்போது நிரூபிக்கப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் தற்போது உள்ள கட்சிகள் 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது உருவானது. அதன்பிறகு இதே கூட்டணி 2021 சட்டசபை தேர்தல், 2024 மக்களவை தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றுள்ளது. இதே கூட்டணி 2026 சட்டசபை தேர்தலை சந்திக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது அதற்கான விதையை தூவியிருப்பவர் தொல். திருமாவளவன். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி:

பாஜக கூட்டணியை அண்ணா திமுக முறித்த போது, திருமாவளவன் மருத்துவமனையில் உடல்நலன் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். பாஜக கூட்டணியை முறித்த 2 நாட்களிலேயே திருமாவளவனை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கடந்த சில மாதங்களாகவே அண்ணா திமுகவுடன் விசிக கூடுதலாகவே நெருக்கம் காட்டி வருவதால்  விசிக- அதிமுக தேர்தல் உறவு உருவாக வாய்ப்பிருப்பது குறித்து பேசப்பட்டு வருகிறது. 

தலித் முதல்வர் கோஷம்:

ஆகஸ்ட் மாதம் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் தலித் முதல்வர் கோஷத்தை முன் வைத்தார். உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி முதல்வராக வந்தது விதிவிலக்கான ஒன்று. எந்தச் சூழலிலும் எந்தக் காலத்திலும் ஒரு தலித், ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது. இதை விவாதித்தால், நாடாளுமன்றத்துடன் ஏன் இந்த அதிகாரம் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

திமுக அரசு நிலையானதா?:

நமக்கு திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது சரி. ஆனால், திமுக அரசு என்பது நிலையானது அல்ல. மாநில அரசுதான் நிலையானது. கட்சிகள் வரும், போகும். அது வேறு. சமூக நீதியின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், வருவார்கள் போவார்கள், அது வேறு. மாநில அரசு எந்தச் சூழலிலும் ஒரு தலித்தை முதல்வராக ஏற்றுக்கொள்கிற நிலை இங்கே இல்லை, வர முடியாது என்று தனது மனதில் இருந்த ஆதங்கத்தை கொட்டியிருந்தார் திருமாவளவன். 

திமுக கூட்டணி தயவு: 

உள்ளாட்சி தேர்தல் வரும் பட்சத்தில் சில மாநகராட்சி மேயர் பதவிக்கு விசிகவும் குறி வைத்துள்ளது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. அது மறுக்கப்படும் பட்சத்தில் கூட்டணியில் விரிசல் மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில் இருந்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல் தனி சின்னத்தில் போட்டியிட்டார் திருமாவளவன். கூட்டணியின் தயவால் தற்போது வெற்றியும் பெற்று விசிக எம்எல்ஏக்களும் எம்.பிக்களும் தற்போது சட்டசபைக்குள்ளும், லோக்சபாவிற்குள்ளும் நுழைந்துள்ளனர். 

மது ஒழிப்பு மாநாடு:

தற்போது திமுக கூட்டணியில் இருந்து கொண்டே திமுக அரசுக்கு எதிராக மது ஒழிப்பு மாநாடு நடத்தப்போகிறார். இது திமுக தலைவர்களுக்கு ஒரு பக்கம் டென்சனை ஏற்படுத்தும் அதே நேரத்தில் அதிமுகவையும் மாநாட்டுக்கு திருமாவளவன் அழைத்திருப்பது உச்சபட்ச கோபத்தை அதிகரிக்கும் என்பது தெரிந்ததுதான். இதன் மூலம் திமுக கூட்டணியை விட்டு வெளியேற தயாராகிவிட்டோம் என்று சொல்லாமல் சொல்கிறாரா திருமாவளவன் என்ற கேள்வி எழுந்துள்ளது.  அண்ணா திமுகவுக்கான விசிகவின் அழைப்பு புதிய கூட்டணிக்கு அச்சாரமாகவும் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். 

மீண்டும் மக்கள் நலக்கூட்டணி:

லோக்சபா தேர்தலின் போதே திமுக மீது வெளிப்படையான அதிருப்தியை மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ கொட்டியிருந்தார்.  திமுக கூட்டணியில் இருந்து வெளியேற விசிக முடிவு எடுத்துவிட்டது. இதே பாணியில் மதிமுக, இடதுசாரிகளையும் திமுக அணியில் இருந்து வெளியேற்றி அண்ணா திமுக பக்கம் கொண்டு வருவதற்கான முயற்சிகளை திருமாவளவன் எடுக்கலாம், பாஜகவுடன் திமுக நெருக்கம் காட்டுகிறது என்பதை கூறி கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கூட்டணியில் இருந்து பிரிக்க திருமாவளவன் முயற்சிக்கக் கூடும். 
என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. 

அதிமுக தலைமையில் புது கூட்டணி:

கடந்த 2016ஆம் ஆண்டில் தேமுதிகவை முன்வைத்து உருவாக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணியின் 2.0 புதிய வெர்சனாக தற்போது அதிமுக தலைமையில் புதிய மக்கள் நலக் கூட்டணிக்கான முன்னோட்டம் தொடங்கிவிட்டது என்பதைத்தான் திருமாவளவன் வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளது. தற்போது விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக இணைந்து புதிய கூட்டணி உருவாகும் பட்சத்தில் அது வலிமையானதாக மாறக்கூடும். இதன் மூலம்  திமுக- காங்கிரஸ் கூட்டணி பலவீனமடைய வாய்ப்பு உள்ளது. 

2026 சட்டசபை தேர்தலில்  பாதிப்பு:

காங்கிரஸ் கட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே அதிக இடங்களை கேட்பது பற்றியும் கூட்டணி ஆட்சி பற்றியும் பேசி வருகிறது. மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலரும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது அல்லது கூட்டணி ஆட்சியில் இடம் பெறுவது குறித்து பேசி வருகின்றனர். இதுவே திமுக கூட்டணியில் உரசலை பற்ற வைத்துள்ளது. தற்போது விசிக தலைவர் திருமாவளவனும் கூட்டணி குளத்தில் கல் எறிந்துள்ளார். சின்னச் சின்ன சலசலப்புகளை திமுக தலைமை சரி செய்யாவிட்டால்  வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக தேர்தலில் தற்போது உள்ள ஆளும் திமுக அரசுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow