”அரசு திட்டமிட்டு கொலை செய்ய பார்க்கிறது..” விடுதலையான சாட்டை துரை முருகன் திமுக மீது பாய்ச்சல்!
விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்காக பிரசாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக கைதானார். இதற்க கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் சாட்டை துரைமுருகனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
திருச்சி: சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் சாட்டை துரைமுருகன். 'சாட்டை' என்னும் பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் இவர், திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகளை வீடியோவாக வெளியிட்டு வந்தார். சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட சமாஜ்வாதி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்திலும் தமிழக அரசை கடுமையாக சாடியிருந்தார். இதனிடையே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் அவர் பாடிய பாடல் சமூக வலைதளங்களிலும் வைரலானது. இதுதொடர்பாக திமுக ஐடி விங் சார்பில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், சாட்டை துரைமுருகனை நேற்று காலை திருச்சி சைபர் க்ரைம் போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதேபோல், சமூக வலைத்தளங்களிலும் சாட்டை துரைமுருகன் கைது சம்பவத்துக்கு எதிராக குரல்கள் எழுந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஃபாக்ஸ்கார்ன் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு நஞ்சானதால், தொழிலாளர்கள் பலர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போதும் இந்த சம்பவம் குறித்து தேவையில்லாத வதந்தி பரப்பியதாக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும், குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் சாட்டை துரைமுருகன். சிறையில் இருந்து வெளியே வந்தது முதல் திமுக அரசின் குறைகளை தொடர்ந்து விமர்சித்து வந்ததால், சாட்டை துரைமுருகன் உள்நோக்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியிருந்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம், ஆம்ஸ்ட்ராங் படுகொலை, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டு என தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய பாடலை பாடியதாக கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் நேற்றிரவு விடுவிக்கப்பட்டார். திருச்சி சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருந்தனர். இதையடுத்து திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாட்டை துரைமுருகனை கைது செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்தது. அதோடு சாட்டை துரைமுருகனை நீதிமன்ற காவலில் வைக்க தேவையில்லை என்று கூறி விடுவித்தது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சாட்டை துரை முருகன், தொடர்ந்து 11 வழக்குகளை போட்டு திமுக அரசு தன்னை முடக்க நினைத்தது. அதேபோல் மீண்டும் ஒரு பொய் வழக்கைப் போட்டு முடக்க முயற்சித்தது. விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் தான் பாடிய பாடலை, அதிமுகவினர் 31 ஆண்டுகளாக பாடி வருகின்றனர். அதனை குறிப்பிட்டு தான் நானும் அப்பாடலை பாடினேன், மாறாக எந்த சமூகத்தையும் நான் இழிவுப்படுத்தவில்லை. திமுக அரசு யாரையும் பேசக்கூடாது என அடக்குமுறையை கையாள்கிறது. மேலும், எனது காரிலேயே போலீஸார் கைது செய்து அழைத்து வந்ததாகவும், அப்போது காரை ஓட்டிய நபர் மது அருந்தியிருந்ததாகவும் சாட்டை துரைமுருகன் குற்றம்சாட்டியிருந்தார்.
அதுமட்டும் இல்லாமல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திட்டமிட்டு எனது காரை விபத்துக்குள்ளாக்க பார்த்தனர். மதுரை டோல்கேட் அருகேயும் எனது காரை விபத்துக்குள்ளாக்கினர். இதன்மூலம் திமுக அரசு திட்டமிட்டு என்னை கொலை செய்ய முயற்சிக்கிறது. இந்த அரசால் எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், நீதிமன்றம் எனது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?