சென்னை: தமிழ்நாட்டில் 4.83 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்தது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்திவாவசிய பொருட்களின் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், தற்போது மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் மின் கட்டண உயர்வுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்டணம் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ''தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ள விடியா திமுக அரசுக்கு என் கடும் கண்டனம். பாராளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார் விடியா திமுக முதல்வர்.
ஸ்டாலின் அவர்களே, உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்! மக்களை வாட்டி வதைப்பதே விடியா திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது. மின்சாரத்தை தடையின்றி வழங்கும் அடிப்படை திறனின்றி, மின் கட்டணத்தை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்தும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்'' என்று கூறி இருந்தார்.
இதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, அமமும மற்றும் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன. 'மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில், கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும், வரும் 23ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்' என்று எடப்பாடி பழனிசாமி முதல் ஆளாக கூறி இருந்தார்.
இதேபோல் மின்கட்டண உயர்வை கண்டித்தும், மாதம் ஒருமுறை மின் பயன்பாட்டை கணக்கீட வேண்டும் என வலியுறுத்தியும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நாளை காலை 11 மணிக்கு பாமகே சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் மின்கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து 22ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக அமமுக தெரிவித்துள்ளது. இதில் மிக முக்கியமாக திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 25ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.