முதல்ல அவங்கள பிடிச்சி உள்ளே போடுங்க.. சாட்டை துரைமுருகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த இபிஎஸ்

திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில் சாட்டை துரைமுருகனை கைது செய்தது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Jul 11, 2024 - 21:43
 0
முதல்ல அவங்கள பிடிச்சி உள்ளே போடுங்க.. சாட்டை துரைமுருகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த இபிஎஸ்
சாட்டை துரைமுருகன் மற்றும் எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில் சாட்டை துரைமுருகனை கைது செய்தது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் சாட்டை துரைமுருகன். 'சாட்டை' என்னும் பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வெளியிட்டு வருகிறார். குறிப்பாக திமுக அரசு மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.

இந்நிலையில், சாட்டை துரைமுருகன் இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். குற்றாலத்தில் தங்கி இருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிட்டார். 

இதற்காக விக்கிரவாண்டி தொகுதியில், சாட்டை துரைமுருகன் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசை கடுமையாக சாடிய துரைமுருகன், அப்பாவி மக்களின் மரணங்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றார். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தும், தமிழ்நாடு அரசு குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகவும் திமுக அரசு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டத் தவறி விட்டதாக சாட்டை துரைமுருகன் குற்றம்சாட்டி இருந்தார். மேலும், கொன்றவர்கள் வேறு நபர்கள், காவல் நிலையத்தில் சரண்டைந்தவர்கள் வேறு நபர்கள், என்றால் தமிழக அரசு உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க பார்க்கிறதா? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். கடைசியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக அரசு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக அடுக்கடுக்கான புகார்களை கூறியிருந்தார். 

இத்தகைய புகார்களின் பேரில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருச்சியில் இருந்து வந்த சைபர் கிரைம் போலீசார், குற்றால அருவியில் தங்கி இருந்த சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளது. சாட்டை துரைமுருகனின் கைதுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், சாட்டை துரைமுருகன் கைதுக்கு முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த மூன்றாண்டு திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், பாலியல் வன்கொடுமையாளர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில், ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதும், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மீதும் சர்வாதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

தன் கையில் இருக்கும் அதிகாரம், நிரந்தரமானது என்ற இருமாப்போடு, 'இம்' என்றால் சிறைவாசம் 'உம்' என்றால் வனவாசம்..... என்ற ரீதியில் வழக்குகள் போட்டு கைது செய்யும் அராஜகம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான திருச்சி சாட்டை துரைமுருகன் அவர்களை, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் தெரிவித்த ஒரு சில கருத்துகளுக்காக பொய் வழக்கு புனைந்து இந்த அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

அவர் மீதான வழக்குகளை திரும்பப்பெற்று, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று காவல்துறை கையில் வைத்திருக்கும் விடியா திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow