ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பிரபல ரவுடி காரில் தப்பி ஓட்டம்.. போலீஸ் தீவிர வேட்டை

Rowdy Seizing Raja in Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் நெருங்கியதும் காரில் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து, காரின் பதிவெண்ணை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Jul 25, 2024 - 12:16
Jul 26, 2024 - 15:33
 0
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பிரபல ரவுடி காரில் தப்பி ஓட்டம்.. போலீஸ் தீவிர வேட்டை
போலீஸாரால் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சீசிங் ராஜா

Rowdy Seizing Raja in Armstrong Murder Case : பெரம்பூரில் கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை என மொத்தம் 16 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்தாண்டு பட்டினப்பாக்கத்தில் நடந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ததாக 11 நபர்கள் வாக்குமூலம் அளித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இவர்களை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக கருதப்படும் திருவேங்கடம், கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் தனிப்படை ஆய்வாளர் முகமது புகாரி தலைமையிலான போலீசார் மாதவரம் பகுதிக்கு கொண்டு செல்லும்போது தப்பிச் செல்ல முற்பட்டதால் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, அதிமுக பேச்சாளரும் மறைந்த பிரபல தாதாவுமான தோட்டம் சேகரின் மனைவியுமான வழக்கறிஞர் மலர்கொடி, ஹரிஹரன் மற்றும் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணியின் துணை அமைப்பாளரான குமரேசனின் மகன் சதீஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

அதன் பின்னர், தலைமறைவாக இருந்த வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளரும், ஆற்காடு சுரேஷின் கள்ளக்காதலியும், பெண் ரவுடியுமான புளியந்தோப்பு அஞ்சலையை கைது செய்தனர். தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டார்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதோடு, இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர். அதேபோல், பிரபல ரவுடி சம்போ செந்திலை (Sambo Senthil) போலீசார் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவிர, ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கை மீண்டும் காவல் துறையினர் கையில் எடுத்து, ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சந்தேகிக்கும்படியான ரவுடிகளை கண்காணித்தும் வருகின்றனர்

இந்நிலையில், இவ்வழக்கில் முக்கிய நபராக பார்க்கக்கூடிய பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, ஆற்காடு சுரேஷின் நண்பரான பிரபல ரவுடி சீசிங் ராஜாவிற்கும் தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்தார். இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சீசிங் ராஜா பண உதவி ஏதேனும் செய்தாரா, கொலைக்கு நேரடி தொடர்பு உள்ளதா என்பதை விசாரிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குறிப்பாக ஆந்திராவில் உள்ள இரண்டாவது மனைவி வீட்டில் ராஜா பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் அங்கு விரைந்து சென்ற போது, போலீசாரின் தகவல் அறிந்து காரில் சீசிங் ராஜா தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. காரின் பதிவு எண்ணை வைத்து தப்பி ஓடிய சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow