US Presidential Candidate Kamala Harris : அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் களமிறங்கியுள்ளார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஜோ பைடன் திடீரென அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து பின்வாங்கினார். அமெரிக்க மக்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்ததாக கூறிய அவர் புதிய அதிபர் வேட்பாளராக தற்போது துணை அதிபராக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸை முன்மொழிந்தார்.
ஜனநாயக கட்சி நிர்வாகிகள் விருப்பப்படி 59 வயதான கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். கமலா ஹாரிஸுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை விட அதிக ஆதரவு உள்ளது. 27 மாகாணங்களில் உள்ள பிரதிநிதிகள் கமலா ஹாரிஸுக்கு தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர்.
ஆகஸ்ட் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நடைபெற உள்ளது. இதில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். இதனைத் தொடர்ந்து கமலா ஹாரிஸுக்கு தேர்தல் நிதி வந்து குவிந்தன. அதாவது முதல் 7 மணி நேரத்தில் மட்டும் அவர் ரூ.391 கோடி நிதி திரட்டியுள்ளார்.
அதிபர் வேட்பாளர் ஒருவர் குறுகிய நேரத்தில் இவ்வளவு நிதியை திரட்டியது அமெரிக்கா வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். இதன்பிறகு 'எக்ஸ்' தளத்தில் அறிக்கை வெளியிட்ட கமலா ஹாரிஸ், ''அடுத்த சில மாதங்களில் அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறேன்'' என்று கூறினார்.
இந்நிலையில், கமலா ஹாரிஸ் தனது பிரசாரத்தை விஸ்கான்சின் மாகாணத்தில் இருந்து தொடங்கியுள்ளார். சுமார் 3,000 பேர் மத்தியில் தனது முதல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர் டொனால்ட் டிரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பிரசாரத்தில் பேசிய கமலா ஹாரிஸ், ''நாங்கள் அமெரிக்காவில் எந்த ஒரு குழந்தையையும் வறுமையில் வளர விட மாட்டோம். ஒவ்வொரு பணியாளரும் சுதந்திரமாக பணிபுரியலாம். நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் மலிவு விலையில் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும. ஒவ்வொரு மூத்த குடிமக்களும் கண்ணியத்துடன் ஓய்வு பெற வழிவகை செய்யப்படும்.
நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்படும். ஏனெனில் நடுத்தர மக்கள் வலிமைமிக்கவர்களாக மாறினால் அமெரிக்காவும் வலிமைமிக்கதாக மாறும். ஆனால் டொனால்ட் டிரம்ப் நாட்டின் சமூக பாதுகாப்பை உடைத்து அமெரிக்காவை பின்னோக்கி கொண்டு செல்ல பார்க்கிறார். அவரது ஆட்சியில் பொருளாதார கொள்கைகள் அனைத்தும் தோல்வி அடைந்தன.
சுகாரத்துறையின் தோல்வியால் குழந்தைகள் ஆஸ்துமாவுடன் அவதிப்பட்டனர். பெண்கள் மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டனர். ஆகையால் நான் அமெரிக்காவை பின்னோக்கி செல்ல விட மாட்டேன். நாம் கடுமையாக போரிடும்போது வெற்றி பெறுவோம்'' என்று கூறியுள்ளார்.