உருட்டு கட்டையுடன் திரண்ட ஆதரவாளர்கள்.. சீமான் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் அவரது வீட்டில் இருந்த நபர்கள் உட்பட 180 பேர் மீது நான்கு பிரிவின் கீழ் நீலாங்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம், தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குறிப்பாக நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி காரை அடித்து நொறுக்கிய சம்பவம் பூதாகரமாக மாறியது.
உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, சகோதரியோ.. அவர்களுடன் உறவு வைத்து கொண்டு சந்தோஷமாக இரு என்று கூறியது தான் பெண் உரிமையா? என்று பெரியார் குறித்து சீமான் கேள்வி எழுப்பியது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. இதன்பின் சீமானி கருத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
சமீபத்தில் சீமான் மீண்டும் பெரியார் குறித்து சர்ச்சை கருத்தை பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் முற்றுகையிட போவதாக தெரிவித்திருந்தனர். இதனால், அவரது இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதையடுத்து சீமான் வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் உருட்டு கட்டைகளுடன் குவிந்தனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் அவரது வீட்டில் இருந்த நபர்கள் உட்பட 180 பேர் மீது நான்கு பிரிவின் கீழ் நீலாங்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக ஆயுதங்களுடன் கூடுதல், மிரட்டல் மற்றும் சென்னை மாநகர காவல் சட்டப்பிரிவு என நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிட கழகம் மாநில ஊடக பிரிவு செயலாளர் ஜனா விஜய் அளித்த புகாரியின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, சீமான் வீட்டை பெரியார் உணர்வாளர்கள் உட்பட பலர் முற்றுகையிட முயன்றனர். மேலும், சீமான் உருவ படத்தை செருப்பால் அடித்தும் உருவ பொம்மையை எரித்தும் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். தடுப்புகளை மீறி செல்ல முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே சீமான் வீட்டை முற்றுகையிட வந்த போராட்டக்காரர்களை தாக்குவதற்காக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சீமான் வீட்டு முன்பு உருட்டுக்கட்டையுடன் திரண்டதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?