School Holiday : பசங்களுக்கு இனி ஜாலி தான்.. காலாண்டு விடுமுறை நீட்டிப்பு.. இத்தனை நாட்களா?
Tamil Nadu School Holiday Announcement : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் கூறியிருந்தார்.

Tamil Nadu School Holiday Announcement : தமிழ்நாட்டில் காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வுகள் நடந்து வருகின்றன. வரும் 27ம் தேதியுடன் இந்த தேர்வுகள் முடிவடைய உள்ளன. பொதுவாக காலாண்டு தேர்வுக்கு பிறகு சில நாட்கள் விடுமுறை விடப்படும் நிலையில், இந்த ஆண்டு எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும்? என மாணவர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இது தொடர்பாக சில நாட்களுக்கு அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை, காலாண்டு தேர்வுகள் முடிந்து வரும் 28ம் தேதி முதல் 2ம் தேதி வரை என 5 நாட்கள் விடுமுறை விடப்படும் என அறிவித்து இருந்தது. ’என்ன.. காலாண்டு விடுமுறை வெறும் 5 நாட்கள்தானா’ என மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பல்வேறு மாவட்டங்களில் வெயில் கடுமையாக கொளுத்தி வரும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி விடுமுறை நாட்களை நீட்டிக்க வேண்டும் என பெற்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில், வரும் 28ம் தேதி முதல் 7ம் தேதி வரை என மொத்தம் 10 நாட்கள் காலாண்டு விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதாவது முதலில் 5 நாட்கள் மட்டுமே விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அது தற்போது 10 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.
முன்னதாக, தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நடப்பு ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் 220 நாட்கள் என பள்ளிக்கல்வித் துறை அட்டவணை வெளியிட்டு இருந்தது. வழக்கமாக 210 நாட்கள் வேலை நாட்கள் இருக்கும் நிலையில், நடப்பாண்டில் அதிகரிக்கப்பட்டதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து பள்ளி வேலை நாட்களை 210 நாட்களாக குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






