மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து வரும் 2,500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய், அரசியலில் தனது திடீர் என்ட்ரி மற்றவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாகவும், இத்தனை நாட்கள் மக்களை பொய் சொல்லி ஏமாற்றியவர்களுக்கு நெருக்கடி இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிகழ்வில், தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் பேசிய விஜய் பேசியதாவது, 1967, 1977 ஆம் ஆண்டு தேர்தலைப் போல தாங்கள் மாற்றத்தை நாங்கள் 2026 தேர்தலில் உருவாக்கப் போவதாகவும், எதிர்ப்புகளை தாங்கள் இடது கையில் கையாண்டு இருப்பதாகவும் கூறினார். தவெக ஒன்றும் பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது என்றும் பண்ணையார்களை தமிழகத்தில் இருந்து அகற்றுவதே தங்கள் கட்சியின் முதன்மை நோக்கம் என்றும் கூறினார்.
இங்கு நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது ஜனநாயக உரிமை என்று சொல்வார்கள்.
விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்த இருப்பதாகவும், பூத் கமிட்டி மாநாடு நடக்கும் போது தமிழ் நாட்டில் தவெகவின் பலம் தெரியும் எனவும் பேசினார்.
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை விவகாரத்தில், LKG குழந்தைகள் போல் மத்திய - மாநில அரசும் சண்டையிட்டு கொள்வதாகவும், மக்கள் பிரச்சனையை பார்ப்பதை விட்டு விட்டு HASTAG போட்டு விளையாடுவதாகவும் விமர்சித்துள்ளார்.
தமிழர்கள் யாருக்காகவும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கமாட்டார்கள் என்றும் தனிப்பட்ட முறையில் மாணவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுகொள்ளலாம், ஆனால் மாணவர்கள் இடையே மொழியை திணிக்கக்கூடாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.
நம்முடைய மாவட்ட நிர்வாகிகள் எல்லாருமே இளைஞர்களாக இருக்கிறார்கள் என்று சொல்கின்றனர். அண்ணா, எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது அதில் இருந்தவர்கள் இளைஞர்கள்தான். அதுதான் வரலாறு. கட்சி நிர்வாகிகள் எல்லாருமே சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்கிறார்கள்.
சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான் பெரிதாக சாதித்திருக்கிறார்கள். நம் கட்சி பண்ணையார்களுக்கான கட்சி இல்லை. அந்த காலத்தில் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள். ஆனால் இப்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களாக மாறிவிடுகிறார்கள்.
மக்களின் நலனை பற்றியோ, நாட்டின் நலனை பற்றியோ கவலையில்லாமல் வெறும் பணம் பணம் மட்டும்தான். இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவதுதான் நம்முடைய முதல் வேலை.” இவ்வாறு விஜய் தெரிவித்தார்.
விழாவில் விஜய் உரைக்கு முன்னதாக மும்மொழி கொள்கைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையில் கையெழுத்திட்டு, #GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த கையெழுத்திட்ட பிறகு, #GetOut கையெழுத்து இயக்கத்தில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட புஸ்ஸி ஆனந்த் அழைப்பு விடுத்த நிலையில் அவர் மறுப்பு தெரிவித்தார்.
#GetOut கையெழுத்து பதாகையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.