மும்பையில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு நள்ளிரவில் வந்து மும்பை மற்றும் புனே உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளை ரகசியமாக கண்காணித்தனர்.
மேலும், சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி சோதனை நடத்தினர். இந்த நிலையில் அதிகாலை மும்பையில் இருந்து வந்த விமானத்தில் உள்ள பயணிகளை கண்காணித்ததில் சென்னையைச் சேர்ந்த 6 பேர் குழுவாக வந்திருந்தனர். இவர்கள் மீது மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பயணிகள் 6 பேரும், கன்வேயர் பெல்ட்டில் வந்த தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு, வெளியில் செல்ல முயன்ற போது மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் 6 பேரையும் நிறுத்தி விசாரித்தனர்.
பின்னர் அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை களைந்து முழுமையாக சோதித்தனர். அப்போது 3 பேர்களின் உள் ஆடைகளுக்குள் தங்கம் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 3 பேரின் உள்ளாடைகளிலும், 3.5 கிலோ தங்க பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு 2.8 கோடி ரூபாய். இதை அடுத்து மூன்று பேரையும் கைது செய்த மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், தங்கப் பசையை பறிமுதல் செய்தனர்.
பின்னர் சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், தங்க பசை துபாயிலிருந்து விமானத்தில் மும்பைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டு, மும்பையில் சுங்கச் சோதனையில், ஏமாற்றிவிட்டு, வெளியில் எடுத்துச் செல்லப்பட்டு, மும்பை ஹோட்டலில் தங்கியிருந்த, சென்னையைச் சேர்ந்த மேலும் 3 பேரிடமும், தங்கப் பசை பார்சல்களை கொடுத்து, உள்ளாடை மற்றும் உடல் போன்றவைகளில் மறைத்து வைத்துக்கொண்டு,மும்பை விமான நிலையத்திலிருந்து, உள்நாட்டு விமானத்தில், சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிய வந்தது.
இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் தங்க பசைகள் மறைத்து வைத்திருந்த 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடன் வந்த 3 பேருக்கும் தங்கம் கடத்தல் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், மும்பையில் இருந்து வந்த விமான பயணிகளிடம், 2.8 கோடி ரூபாய் மதிப்புடைய 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு , கடத்தல் பயணிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.