Vaiko : ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நீடிக்க தகுதியில்லை.. மதிமுக உயர்நிலைக்குழு தீர்மானம்

MDMK Vaiko Against Governor RN Ravi : இந்திய அரசியலமைப்பு கட்டமைப்பில் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை. ஏனெனில் இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது என மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Sep 25, 2024 - 12:50
Sep 25, 2024 - 17:29
 0
Vaiko : ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நீடிக்க தகுதியில்லை.. மதிமுக உயர்நிலைக்குழு தீர்மானம்
MDMK Resolution Against Tamil Nadu Governor RN Ravi

MDMK Vaiko Against Governor RN Ravi : ஆர்.எஸ்.எஸ். பட்டறையில் உருவான ஆளுநர் ஆர்.என்.ரவி. மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக் கூறி வருவது கண்டனத்துக்குரியது.
ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதே தாக்குதல் தொடுத்துள்ளார். அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் பதவியேற்றுள்ள அவர் ஆளுநர் பொறுப்பில் நீடிக்க தகுதியற்றவர், உடனடியாக அவரை குடியரசுத் தலைவர் ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம், இன்று 25.09.2024 புதன்கிழமை காலை 10 மணிக்கு, தலைமை நிலையம் தாயகத்தில் கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா உள்ளிட்ட உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை: 

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆராய  முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை ஒன்றிய அமைச்சரவை செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று ஏற்றுக்கொண்டு உள்ளது.ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்தங்களுக்கான ஒரு பெரிய நடவடிக்கை என்று மத்திய  அரசு கூறுகிறது.

குழுவின் பரிந்துரைகளின் படி இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த இரண்டு முக்கிய அரசியலமைப்பு திருத்தங்கள் தேவைப்படும். இதன்கீழ் அரசியலமைப்பின் 83 மற்றும் 172-ஆவது பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.ஆனால், தற்போதைய மக்களவையில் பா.ஜ.கவுக்கு 240 இடங்கள் மட்டுமே உள்ளது. பெரும்பான்மைக்கு பாஜக அரசுக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவை. எனவே இது அரசுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.

இந்திய அரசியலமைப்பு கட்டமைப்பில் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை. ஏனெனில் இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது ஆகும்.நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த, பதவிக்காலம் முடிவடையாத மாநிலங்களின் சட்டப்பேரவைகளை கலைக்க வேண்டியிருக்கும்.

மாநில சட்டப்பேரவை தேர்தல், அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலங்கள் பட்டியலில் வருகிறது. மாநில சட்டப்பேரவையை முன்கூட்டியே கலைக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டு. ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் இந்த உரிமையை மாநிலத்திடமிருந்து பறித்துவிடும்.இது அமலானால் சட்டப்பேரவையை கலைக்கும் உரிமை மாநில அரசிடம் இருக்காது, அதன் கட்டுப்பாடு மத்திய அரசிடம் சென்றுவிடும்.கேசவானந்த பாரதி வழக்கில், உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பில்  எந்தத் திருத்தத்தையும் செய்யலாம், ஆனால் அதன் அடிப்படைக் கட்டமைப்பை மாற்ற முடியாது என்று தெளிவாகக் கூறியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.எனவே நடைமுறை சாத்தியமற்ற ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக வலியுறுத்துகிறது.

மீனவர்கள் பிரச்சினை:

தமிழ்நாட்டு மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகிறபோது, இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாவதும், படகு உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர் நிகழ்வுகளாகி விட்டன.தமிழ்நாடு மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்வதும், மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து அரசுடமை ஆக்குவதும் இலங்கை மீன்பிடி தடை சட்டத்தின் படி கடுமையாக அபராதம் விதிப்பதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இந்திய அரசு, இலங்கையில் புதிதாக பொறுப்பேற்று உள்ள அனுரா குமார திசநாயக அரசுடன் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் , கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை மீட்கவும், இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் மீது விதித்துள்ள அபராதம், சிறை தண்டனை போன்றவற்றை ரத்து செய்யவும் அறிவுறுத்த வேண்டும் என மதிமுக உயர்நிலை குழு வலியுறுத்துகிறது.

இலங்கை தமிழர்கள்:

இலங்கையில் சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையால்   இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் ஈழத் தமிழினம் மீண்டு எழ முடியவில்லை. தங்கள் சொந்த இடங்களை இழந்தவர்கள், வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள், சொத்துகளை இழந்தவர்கள், ரத்த உறவுகளை பறிகொடுத்தவர்கள் என்று இனக்கலவரத்தின் துயரங்கள் சொல்ல முடியாத வேதனையை தந்து கொண்டு இருக்கிறது. 

இதன் தொடர்ச்சியாக தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்படும் சூழல் அங்கு உருவாகியுள்ளது. தமிழர்களின் ஊர்ப்பெயர்கள் அழிக்கப்பட்டு, அந்த ஊர்களுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. அந்த ஊர்களில் சிங்களர்கள் குடியேற்றம் செய்யப்படுகிறார்கள். புத்த விகாரங்கள் அமைக்கப்பட்டு, புத்தபிக்குகள் குடியேற்றம் உருவாக்கப்படுகிறது. புத்த விகாரங்களில் வழிபட ராணுவத்தினரும், சிங்களரும் அழைத்து வரப்படுகிறார்கள். தமிழர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட நிலங்கள் இதுவரை திருப்பித் தரப்படவே இல்லை. மாறாக, அவ்விடங்களில் சிங்களர்கள் குடியேற்றம் அமைக்கப்பட்டு, அரசு இடங்களை சிங்களர்களுக்கு தானமாக வழங்குகின்றனர். தொடர்ந்து இன அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருவது தமிழர்களின் பண்பாட்டை சிதைக்கக் கூடிய திட்டமிட்ட சதித்திட்டம் ஆகும்.

இந்நிலையில் இலங்கைத் தேர்தலில் ஜேவிபி கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று அனுரா குமார திசநாயக அதிபராக பொறுப்பு ஏற்றுள்ளார்.ஈழத் தமிழர்களின் அரசியல் இறையாண்மையை ஏற்றுக் கொள்ளாத சிங்கள இனவாத ஜேவிபி கட்சியின் கடந்த கால செயல்பாடுகள் ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தன. இந்நிலையில் இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமை, வாழ்வுரிமையைப் பாதுகாக்க இந்திய அரசு தேவையான தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக வலியுறுத்துகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு:

மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யும் முறை, மாதிரி வடிவமைப்பு, கணக்கெடுப்புக்கான கருவிகள் உள்ளிட்டவை குறித்து ஒன்றிய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பொருளாதார நிபுணரும், முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணருமான பிரணாப் சென் தலைமையில் 14 பேர் கொண்ட புள்ளியியல் நிலைக்குழுவை (Standing Committee on Statistics -SCoS) ஒன்றிய பாஜக அரசு கடந்தாண்டு ,2023 ஜூலை 13 ஆம் தேதி மாதம் அமைத்தது.

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) அனைத்து புள்ளிவிவர ஆய்வுகளையும் மேற்பார்வையிட   அமைக்கப்பட்ட புள்ளியியல் நிலைக்குழுவை  ஒன்றிய அரசு கலைத்திருக்கிறது.

குழுவை கலைப்பதாக உறுப்பினர்களுக்கு தேசிய மாதிரி ஆய்வுகள் துறையின் இயக்குநர் கீதா சிங் ரத்தோர் அனுப்பிய மின்னஞ்சலில், “மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வழிநடத்தல் குழு மற்றும் நிலைக்குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் ஒன்றோடு ஒன்று முரண்படுவதால், நிலைக்குழுவை கலைக்க அமைச்சகம் முடிவெடுத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரக் கணக்கெடுப்பில் தாமதம் மற்றும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் தாமதம் குறித்து முந்தைய கூட்டங்களில் விவாதங்கள் நடைபெற்றதாகவும், அது நிலைக் குழுவைக் கலைக்கப்படுவதற்கான  காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்றும் புள்ளியியல் நிலைக்குழுவின் (எஸ்சிஓஎஸ்) உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

புள்ளியியல் நிலைக்குழு தலைவரும், இந்தியாவின் முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணருமான  பிரணாப் சென், “புள்ளியியல் நிலைக்குழு கலைக்கப்பட்டதற்கானக் காரணத்தை அமைச்சகம் குறிப்பிடவில்லை. அவர்கள் ஒரு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தனர்,“என்று கூறியுள்ளார்.மேலும் அவர்தரவுகளின் முக்கிய ஆதார மான மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏன் இன்னும் நடத்தப்படவில்லை” என்று கூட்ட ங்களில் தாங்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.முறையான காரணமின்றி நிலைக்குழுவின் உறுப்பினர்களுக்குகூட தகவல் அளிக்காமல், அந்த குழுவை மத்திய அரசு கலைத்துள்ளது.

புள்ளியியல் நிலைக் குழுவின் தலைவரிடம்  கூட கலந்து ஆலோசனை மேற்கொள்ளாமல் திடீரென்று குழுவை ஒன்றிய அரசு கலைத்திருப்பது ஐயப்பாடுகளை ஏற்படுத்துகிறது.2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மூன்றாண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டுள்ளதால் மக்களுக்கான நலவாழ்வு திட்டங்கள் செயல்படுத்துவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலமே இந்த ஆட்சியின்போது ஏற்பட்ட கல்வி வளர்ச்சி தெரியவரும். அதுமட்டுமின்றி பல்வேறு நலத்திட்டங்களுக்கும் மக்கள் தொகையை அடிப்படையாக வைத்துதான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மிகவும் முக்கியமாக அடுத்து செய்யப்படவிருக்கும் தொகுதி மறு சீரமைப்பு 2021 சென்சஸ் அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும்.சமூக நீதியை முறையாக செயல்படுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.இந்நிலையில் மத்திய அரசு புள்ளியியல் நிலைக் குழுவை கலைத்து,மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலும் தாமதமாகும் சூழலை  திட்டமிட்டே ஏற்படுத்தி வருவது ஏற்கத்தக்கதல்ல.மத்திய அரசு உடனடியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிகளை தொடங்க வேண்டும் என்று மதிமுக உயர்நிலைக் குழு கேட்டுக் கொள்கிறது.

வேலை வாய்ப்பு:

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன;  இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ரூ.17,614 கோடி மதிப்பிலான 19 வகை திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார் . இதன் மூலம் 64,968 பேருக்கு வேலை கிடைக்கும்.  மேலும் ரூ.51,157 கோடி மதிப்பிலான 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார்; இதன் மூலம் 41,835 பேருக்கு வேலை கிடைக்கும்.

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.அமெரிக்காவில் 17 நாட்களில் 25 நிறுவனங்களுடன் மேற்கொண்ட சந்திப்பில் ரூ.7,618 கோடி மதிப்பிலான 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின . இதன் மூலம் 11,516 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசின் வேண்டுகோளை ஏற்று ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தமிழகத்தில் செயல்பட முன்வந்துள்ளது. முதல்வரின் அமெரிக்கப் பயணம் தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனைப் பயணமாக அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமுடன் செயல் படும் தமிழ்நாடு அரசுக்கு மதிமுக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி:

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் நடைபெற்ற இந்து தர்ம வித்யா பீடத்தின் பட்ட மளிப்பு விழாவில் பேசிய ஆர்.என்.இரவி, மதச் சார்பின்மை என்பது ஒரு ஐரோப்பிய கருத்து. மதச் சார்பின்மை என்பது ஒரு இடைச்செருகல். இந்தியாவுக்கு மதச்சார்பின்மை தேவையில்லை என்று பேசி உள்ளார்.

மதச்சார்பின்மை, ஜனநாயகம், மொழிவழி மாநிலங்கள் என்பதெல்லாம் விடு தலைப் போராட்டத்தில் விளைந்த விழுமியங்கள். விடுதலை பெற்ற இந்தியாவின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும், மொழிகளுக்கிடையே சமத்து வமும் நிலைக்க வேண்டுமானால் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக திகழ வேண்டும் என்ற கருத்து எழுந்தது. அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை யில் மதச்சார்பின்மை என்கிற சொற்றொடர் அவசர நிலைக் காலத்தின் போது சேர்க்கப்பட்ட போதும் மொத்த அரசமைப்புச் சட்டமும், மதச் சார்பின்மை, கூட்டாட்சி, ஜனநாயகம் என்ற அடித்தளத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். பட்டறையில் உருவான ஆளுநர் ஆர்.என்.இரவி. மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக் கூறி வருவது கண்டனத்துக்குரியது. ஆளுநர் ஆர்.என்.இரவி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதே தாக்குதல் தொடுத்துள் ளார். அரசமைப்புச் சட்டத்தின் பெயரால் பதவியேற்றுள்ள அவர் ஆளுநர் பொறுப்பில் நீடிக்க தகுதியற்றவர், உடனடியாக அவரை குடியரசுத் தலைவர் ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்துகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow