சென்னைக்கு ரெட் அலெர்ட்... மீட்புப் படைகள் தயார் என அறிவிப்பு!
சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக இன்று (அக்.14) தென்மேற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி , நேற்று (அக். 13) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை மறுதினம் (அக். 16) தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், சில நேரங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னைக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இம்முறை மிக அதிகளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. அதன் முதல்படியாக நெல்லையில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழுக்கள் சென்னை விரைகின்றதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 3 குழுக்கள் உள்ள நிலையில் மேலும் 6 குழுக்கள் சென்னை விரைகின்றன. இதைத் தவிர்த்து திருச்சியில் 3 குழுக்கள், கோவையில் 3 குழுக்கள், மேட்டுபாளையத்தில் 3 குழுக்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. ஒரு குழுவிற்கு 25 வீரர்கள் விதம் 450 வீரர்கள் அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். சென்னை மாநகரில் பருவமழையை எதிர்கொள்ள சென்னை போலீசார் தயார் நிலையில் உள்ளனர். தண்ணீர் அதிகமாக தேங்கும் இடங்களில் 50 இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இது தவிர ஆயுதப்படையில் உள்ள பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 300-க்கும் மேற்பட்ட காவலர்களும் தயார் நிலையில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரை போன்றே சிறப்பு பயிற்சி பெற்ற இவர்கள் 12 துணை கமிஷனர் அலுவலகங்கள் நான்கு இணை கமிஷனர் அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு தனித்தனியே பிரித்தும் கொடுக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் காவல் நிலையங்கள் வாரியாக தனியாக கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டு உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மழைக்கால மீட்புப் பணிகளுக்காக அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு வீரர்கள் முழுமையாக பணிக்கு திரும்பி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தீயணைப்பு துறை டிஜிபி ஆபாஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். தீயணைப்பு வாகனங்களும், மீட்பு உபகரணங்களும் பழுது நீக்கப்பட்டு முழு செயல் திறனுடன் தயார் நிலையில் இருப்பதை அந்தந்த மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மீட்பு பணிகளுக்காக 20 பேர் கொண்ட சிறப்பு விரைவுப்படை தயார் நிலையில் உள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
What's Your Reaction?