இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கப்படும்...முன்னாள் அமைச்சர் ஆவேசம்

மண்ணை விற்பவன் திமுக காரன் அவன் மீது வழக்கு இல்லை, மண்ணை நிரவிய பொக்லைன் ஆபரேட்டர்  அதிமுக காரர்கள்  மீது பொய் வழக்கு போடுகிறார்கள்.

Apr 1, 2025 - 06:35
Apr 1, 2025 - 07:30
 0
இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கப்படும்...முன்னாள் அமைச்சர் ஆவேசம்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் கோவை சாலையில் ஆண்டாள் கோயில் மேல்பாகம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தம் பாளையம் கிராமத்தில் வசிப்பவர் அருள் (வயது 47). இவர் தாந்தோணி மேற்கு ஒன்றிய அதிமுக அம்மா பேரவை  துணை தலைவராக இருந்து வருகிறார்.இவர் வீட்டின் முன்புறம் உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் உள்ள பள்ளத்தில் 2 லோடு கிராவல் மண்ணை கொட்டி சமன் செய்து வீட்டிற்கு வழி ஏற்படுத்தும் பணியினை மேற்கொள்ள இருந்தார்.

அதிமுக நிர்வாகி கைது 

இதனை அறிந்த ஆண்டாங் கோவில் மேல்பாக ஊராட்சி செயலாளர் பழனிசாமி அங்கு சென்று அருளிடம் இங்கு மண் கொட்டக்கூடாது என எச்சரித்ததுடன், இதனை அகற்ற வேண்டும் என்று கூறியதாகவும், இரு தரப்பினரும் இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.இதனை தொடர்ந்து  ஊராட்சி செயலாளர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் அருளை விசாரணைக்காக காவல் நிலையம் வரும்படி தகவல் தெரிவித்துள்ளனர். 

Read more: அறக்கட்டளைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம்.. வேறு நபருக்கு பட்டா!

இதனையடுத்து விசாரணைக்காக வந்த அருளை போலீசார் கைது சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார்  செய்தனர். இதற்கிடையில் தகவலறிந்து காவல் நிலையத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கறிஞர்கள் மூலம் அருளை ஜாமின் எடுப்பதற்கான பணியினை மேற்கொண்டார். 

வாக்குவாதம்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காவல் நிலையத்தில் இருக்கும் தகவலறிந்து அங்கு வந்த அதிமுகவினர் சுமார்  100-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் திரண்டனர். அவர்களை போலீசார் காவல் நிலைய வளாகத்தில் இருந்து வெளியேற்றினர். 

சாலையிலும் அதிமுகவினரை நிற்க விடாமல் போலீசார் விரட்டியதால் காவல் நிலைய வளாகத்திலிருந்து வெளியில் வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், நகர காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜிடம் வாக்குவாதத்தில் ஈட்டுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் கைது செய்யப்பட்ட அருளை கைது போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை விசாரித்த நீதிபதி பிணையில் விடுவித்தார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அருளின் மனைவி ஊராட்சி செயலாளர் மீது புகார் அளித்தார்.

முற்றுப்புள்ளி வைக்கப்படும்

இதனை தொடர்ந்து காவல் நிலைய வளாகத்திலிருந்து வெளியில் வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசிய போது, அதிமுகவினர் மீது தொடர் பொய் வழக்கு பதியப்படுவது தொடர்கதையாக இருந்து வருவதாகவும், அராஜகம் நடக்கிறது. இங்கு விடிய, விடிய மணல் கடத்துகிறார்கள். கஞ்சா விற்கிறார்கள், சந்து சந்திற்கு மது விற்பனை நடைபெறுகிறது.அவர்களை தடுக்காத காவல் துறை, அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். மண்ணை விற்பவன் திமுக காரன் அவன் மீது வழக்கு இல்லை, மண்ணை நிரவிய பொக்லைன் ஆபரேட்டர்  அதிமுக காரர்கள்  மீது பொய் வழக்கு போடுகிறார்கள்.

கரூரில் அதிமுகவினர் மீது போடாத வழக்கு இல்லை. ஆளும் கட்சியினர் சொல்கின்றபடி போலீசார் நடந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கப்படும். அடுத்து பொதுச்செயலாளர் எடப்பாடியார் முதல்வராவார், தப்பு செய்கின்ற காவல் துறை பதில் சொல்லியே ஆக வேண்டும். இதற்காக கரூரில் இருக்கும் அதிமுககாரன் எல்லாம் ஊரை விட்டு போய் விட வேண்டுமா, இதற்கெல்லாம் ஆண்டவன் நல்ல முடிவை சொல்வான், இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow