வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் மறைவு! - தலைவர்கள் இரங்கல்!

உடல்நலக் குறைவு காரணமாக வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் இன்று காலமான நிலையில் அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Sep 10, 2024 - 16:34
Sep 11, 2024 - 09:48
 0
வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் மறைவு! - தலைவர்கள் இரங்கல்!
த.வெள்ளையன் மறைவு! - அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்!

இதுதொடர்பாக மாநில சிபிஐ(எம்) செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், “வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. ணிகர்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அரும்பாடுபட்டவர்.  ஒன்றிய, மாநில அரசுகளின் தாராளமயக் கொள்கைகள் மற்றும் வணிகர்களை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகம், வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் நுழைவைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களிலும், ஜனநாயக இயக்கங்களிலும் கலந்து கொண்டு குரலெழுப்பியவர். அவரது மறைவு வணிகர்களுக்கும், ஜனநாயக இயக்கங்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வணிகர் சங்கத்தினருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது” என தெரிவித்துள்ளார். 

வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று பிற்பகலில் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். 

தமிழ்நாட்டில் பல்வேறு அணிகளாக பிரிந்து கிடந்த வணிகர்களை ஒருங்கிணைந்து ஒரு குடைக்குள் கொண்டு வந்து வலிமையான அமைப்பை கட்டமைத்தவர் வெள்ளையன். வணிகர்களின் உரிமைகளுக்காக ஏராளமான போராட்டங்களை நடத்தி, பல கோரிக்கைகளை வென்றெடுத்தவர். என்னால் நிறுவப்பட்ட தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இயக்கம் நடத்திய போது அதற்காக என்னுடன் துனை நின்றவர். ஈழத்தமிழர் நலனுக்காக பாட்டாளி மக்கள்  கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். வெள்ளையன் அவர்களின் மறைவு வணிகர் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

வெள்ளையன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், வணிகர் அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். 

வெள்ளையன் மறைவு குறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது X தளத்தில், “தமிழக வணிகர்களின் நலனுக்காக பல்லாண்டுகள் அல்லும் பகலும் பாடுபட்ட அன்பு சகோதரர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும். வணிகப் பெருமக்களுக்கும் என் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow