ரஜினியும் நானும் நண்பர்கள்.. எங்க நகைச்சுவையை பகைச்சுவை ஆக்கிடாதீங்க.. துரை முருகன் கல கல

ரஜினிகாந்த் பற்றி நான் பேசியது நகைச்சுவைதானே தவிர, பகைச்சுவை அல்ல, எங்களுடைய நகைச்சுவையை பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Aug 26, 2024 - 17:22
 0
ரஜினியும் நானும் நண்பர்கள்.. எங்க நகைச்சுவையை பகைச்சுவை ஆக்கிடாதீங்க.. துரை முருகன் கல கல
duraimurugan vs rajinikanth

சென்னை:

நானும் ரஜினியும் எப்போதும் நண்பர்களாகவே இருப்போம் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் பற்றி நகைச்சுவையாக பேசினேன். எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். ரஜினியுடன் நட்பு எப்போதும் தொடரும் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். முதல்வர் ஸ்டாலின், புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை பெற்றுக் கொண்டார் ரஜினிகாந்த். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். இந்த விழாவில் ரஜினி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

மூத்த அமைச்சர்களை வைத்து, தமிழக அரசை ஸ்டாலின் அரசு நடத்துவது பற்றி நடிகர் ரஜினிகாந்த் கிண்டலாக பேசினார். "ஒரு வகுப்பில் புதிய மாணவர்கள் வந்தால் எளிதில் சமாளித்து விடலாம். பழைய மாணவர்கள் இருந்தால் சமாளிப்பது கஷ்டம். பாஸ் ஆகி, ரேங்க் வாங்கிக்கொண்டும் போக மாட்டேன் என்று கூறிக்கொண்டு வகுப்பில் இருக்கும் பழைய மாணவர்கள் என்று குறிப்பிட்டுப் பேசினார் ரஜினிகாந்த். 

துரைமுருகன் இருக்கிறார். அவர் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். ஒரு விஷயம் செய்துகொண்டிருக்கிறோம் என்று அவரிடம் கூறி எப்படி இருக்கிறது என்று அவரிடம் கேட்டால் சந்தோஷம் என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவார். நன்றாக இருக்கிறது என்று சொல்கிறாரா அல்லது நன்றாக இல்லை என்று சொல்கிறாரா என்பது யாருக்கும் புரியாது. இந்த சூழலிலும் சிறப்பாக வேலை பார்த்துவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஹேட்ஸ் ஆஃப்' என்றார் ரஜினிகாந்த். 

இதுகுறித்த கேள்விக்கு நேற்று பதிலளித்த அமைச்சர் துரைமுகன், தன் பாணியில் ரஜினியை கிண்டல் செய்தார். "மூத்த நடிகர்கள் பல்லுப்போய், வயசாகி, தாடி வளர்த்துக்கொண்டும் நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை" என்று தெரிவித்தார். ரஜினிகாந்த் பேச்சுக்கு பதிலடியாக துரைமுருகன் கிண்டல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சை பற்றி இன்று நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "துரைமுருகன் எனது நீண்ட கால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் தப்பு கிடையாது. துரைமுருகன் உடனான எனது நட்பு எப்போதும் போல தொடரும் என்று பதில் அளித்தார்.

ரஜினிகாந்த் சொன்ன பதில் குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், "நடிகர் ரஜினி பற்றி நகைச்சுவையாக பேசினேன். எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். ரஜினியும், நானும் எப்போதும் நண்பர்களாவே இருப்போம். ரஜினியுடன் நட்பு எப்போதும் தொடரும்" என பதில் அளித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow