ரோசாப்பூ.. சின்ன ரோசாப்பூ..காற்றில் கலந்த ரவிஷங்கர் - நண்பர்கள் கண்ணீர் அஞ்சலி

வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தை இயக்கிய ரவிசங்கர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது திரை உலக நண்பர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தனிமையே அவரை கொன்று விட்டது என்று கூறி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் அவரது திரை உலக நண்பர்கள்.

Jul 13, 2024 - 17:51
Jul 13, 2024 - 18:32
 0
ரோசாப்பூ.. சின்ன ரோசாப்பூ..காற்றில் கலந்த ரவிஷங்கர் - நண்பர்கள் கண்ணீர் அஞ்சலி
Tamil Movie Director Ravisankar Commit Suicide

கடந்த 2002ஆம் ஆண்டு சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா, குணால் நடிப்பில் வெளியான படம் ‘வருஷமெல்லாம் வசந்தம்’ திரைப்படத்தை இயக்கியவர் ரவி சங்கர். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘எங்கே அந்த வெண்ணிலா’ உள்ளிட்ட அனைத்துப் பாடல்களையும் ரவிஷங்கரே எழுதியிருந்தார்.பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். இன்றைக்கும் பலரது ரிங்டோன் ஆக உள்ளது எங்கே அந்த வெண்ணிலா பாடல். 

63 வயதாகும் ரவிஷங்கர் திருமணம் செய்துகொள்ளவில்லை. சென்னை கே.கே.நகரில் உள்ள வீட்டில் தனியே வசிந்து வந்த அவர், தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ரவிசங்கரின் திரை உலக நண்பர் கல்யாண் குமார் தனது முகநூல் பக்கத்தில் ரவிசங்கர் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், பாக்யா வார இதழ் ஆரம்பித்த புதிது. அதில் நான் அசோசியேட் எடிட்டர். தபாலில் வந்திருந்த சிறுகதைகளை தேர்வு செய்து கொண்டிருந்தேன். அதில் 'குதிரை' என்றொரு சிறுகதையின் எழுத்து நடை பிரமாதமாக இருந்தது. எழுதி இருந்தவர் சென்னையில் வசிக்கும். ரவிஷங்கர் என்ற ஒரு இளைஞர். உடனே ஆசிரியர் பாக்யராஜிடம் கொடுத்து படிக்க வைத்தேன். படித்து முடித்தவர், கார் அனுப்பி அந்த இளைஞரை அழைத்து வரச் செய்தார். சிறுகதை பற்றி பாராட்டிவிட்டு, தன்னிடம் உதவியாளராகவும் சேர்த்துக் கொண்டார். 

இது நம்ம ஆளு உட்பட சில படங்கள் வேலை செய்துவிட்டு, இயக்குனர் விக்ரமன் படங்களில் பணிபுரிந்தார்,  ரவிஷங்கர். சூர்யவம்சம் படத்தில் இடம்பெற்ற
 ' ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' என்ற பாடல் உட்பட சில பாடல்களையும் எழுதினார். பின்னர் இயக்குனராகி 'வருஷமெல்லாம் வசந்தம்' என்ற படத்தை இயக்கியதோடு, அதில் எல்லா பாடல்களையும் எழுதி இருந்தார். அதில் 'எங்கே அந்த வெண்ணிலா?'  என்ற பாடல் உட்பட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. 
திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையிலேயே வசித்தார். நண்பர்களின் தொடர்பையும் குறைத்துக் கொண்டார். நேற்று இரவு கே கே நகரில் உள்ள தன் அறையில் தூக்கு போட்டு, தற்கொலை செய்து கொண்டார் ரவிஷங்கர்! தனிமையே அவரை கொன்றுவிட்டதாக கருதுகிறேன். ஒரு மிகப் பெரிய இயக்குனராக அல்லது  பாடலாசிரியராக வலம் வருவார் என்று எதிர்பார்த்தேன். தமிழ் சினிமாவின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் தன்னை தொலைத்துக் கொண்டார். 

போய்வாருங்கள் ரவிஷங்கர்... வலியோடு உங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்... ஒரு ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ காற்றில் கரைந்து போனது... என்று பதிவிட்டுள்ளார் கல்யாண் குமார்.


தற்கொலை தீர்வல்ல: 

தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow