Russia Ukraine War : உக்ரைனுக்கு உதவ இந்தியா தயார்!... ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி கூறியது என்ன?
PM Modi About Russia Ukraine War : உக்ரைன் அமைதி திரும்புவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது என பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார்.

PM Modi About Russia Ukraine War : கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக தொடர்ந்து நீடிக்கும் இந்த போரில் உக்ரைன் நாட்டின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. ஆனாலும், ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் கடுமையாக போராடி வருகிறது. போரை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் ரஷ்யாவை நேரடியாக வலியுறுத்தின. ஆனாலும், ரஷ்யா தனது தாக்குதலைத் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதேநேரம் ரஷ்யாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் உதவி செய்து வருகின்றன.
அண்மையில் பிரதமர் மோடி போலாந்து, உக்ரைன் நாடுகளுக்கு 3 நாள் பயணமாக சென்றிருந்தார். முதலில் போலாந்துக்கு சென்ற மோடி, பிறகு கிட்டத்தட்ட 10 மணி நேரம் ரயிலில் பயணம் செய்து உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் சென்றடைந்தார். மூன்றாவது முறையாக இந்திய நாட்டின் பிரதமராகியுள்ள நரேந்திர மோடிக்கு, உக்ரைன் அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரிகள், உக்ரைன் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர். இதனையடுத்து, உக்ரைனின் தலைநகரமான கீவ் நகரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் நரேந்திரமோடி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
உக்ரைன் சென்றது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், ”கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினேன். காந்தியின் இலட்சியங்கள் உலக அளவில் இருக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றன. அவர் காட்டிய வழியை நாம் அனைவரும் பின்பற்றுவோம்” என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் படிக்க: புதிய ரேஷன் கார்டுகளுக்கு அப்ளை பண்ணியிருக்கீங்களா?.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
கீவ் நகரில் அமைந்துள்ள போர் நினைவுக் கூடத்திற்குச் சென்ற பிரதமர் மோடியை, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வரவேற்றார். இருவரும் மாறிமாறி ஆரத்தழுவிக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்தபோது பேசிய பிரதமர் மோடி, “இந்த போரில் நாங்கள் (இந்தியா) நடுநிலை வகிக்கவில்லை. தொடக்கத்தில் இருந்தே ஒருபக்க சார்பாகவேதான் இருக்கிறோம். அது அமைதியின் பக்கம். நாங்கள் புத்தரின் நிலத்தில் இருந்து வந்திருக்கிறோம். அங்கே போருக்கு இடமில்லை. மகாத்மா காந்தியின் தேசத்தில் இருந்து வந்திருக்கிறோம். ஒட்டுமொத்த உலகுக்கும் ஒரு அமைதியின் செய்தியை வழங்கியவர் அவர். ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்றால் அதற்கு பேச்சுவார்த்தைகள் மற்றும் தூதரக நடவடிக்கைகள்தான் கைகொடுக்கும். எனவே நேரத்தை வீணடிக்காமல் அதை நோக்கி நாம் நகர வேண்டும். உக்ரைன் அமைதி திரும்புவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






