இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்... இன்று வாக்குப் பதிவு தொடக்கம்..!
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று (நவ. 14) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.
இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்படும். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று புதிய அதிபரானார்.
நாடாளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை இல்லாததால், பதவியேற்ற மறுநாளே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதையடுத்து, நவம்பர் 14 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. 21 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து அதிபரின் தேசிய மக்கள் சக்தி களமிறங்குகிறது. ராஜபக்சேக்களின் இலங்கை பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, புதிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. சுமார் 9 ஆயிரம் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
இன்று வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், கடந்த 12ம் தேதி நள்ளிரவு தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் 1 கோடியே 17 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 10 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் இன்று மாலையே வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் மேற்பார்வையில் அரசு ஊழியர்களால் வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் நாளை (நவ. 14) முறைப்படி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?