நட்ட நடு ரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்... அறக்கட்டளை நிறுவனருக்கு காவலர் கொடுத்த பரிசு... ஆடிப்போன தென்காசி!
தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் ,மெயின் ரோட்டில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய இளைஞரை காவல்துறையினர் தடாலடியாகக் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகில் உள்ள தாருகாபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், வயது 29. இவர் தென்காசியில் பொதிகை அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்கி மாவட்டம் முழுவதும் பல்வேறு சேவைகள் செய்து வந்ததுடன், மாவட்டம் முழுவதும் தனது அறக்கட்டளை மூலம் பொதுமக்களுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தனது அறக்கட்டளை மூலம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் வைத்து பல்வேறு நபர்களுக்கு வட்டி இல்லா கடனை வழங்கியும் உள்ளார். இந்நிலையில் கிருஷ்ணன் நேற்று (நவ. 13) தனது 29வது பிறந்த நாளை முன்னிட்டு, தனது ஆதரவாளர்களாக உள்ள 50க்கும் மேற்பட்ட இளைஞர்களை திரட்டி தென்காசி நகரில் மிகவும் பரபரப்பாக காணப்படும் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மெயின் ரோட்டில் தனது காரின் மேல் பிரம்மாண்ட கேக்கை வைத்து வெட்டி மேளதாளம் முழங்க பிறந்த நாளை கொண்டாடினார்.
அப்போது அவரது ஆதரவாளர்கள் கிருஷ்ணனுக்கு தங்கத்தினால் ஆன மோதிரம் மற்றும் கையில் அணியும் காப்பை அணிவித்து உற்சாகமாக பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் அங்கு வேகமாக வந்த தென்காசி காவல் ஆய்வாளர் ராபர்ட் ஜெயின் கிருஷ்ணனிடம் யாரை கேட்டு மெயின் ரோட்டில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி வருகிறீர்கள்? யார் உங்களுக்கு அனுமதி வழங்கியது? என கேள்விகள் எழுப்பினார். பின்னர் காவல் நிலையத்திற்கு வருமாறு கிருஷ்ணனை அழைத்தார். ஆனால் கிருஷ்ணனோ தான் ஏற்கனவே காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு கடிதம் வழங்கியுள்தாகவும் இதுவரை தடுக்காமல் இப்போது ஏன் வந்தீர்கள் என்றும் பதிலுக்கு கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் ராபெர்ட் ஜெயின், யாருக்கும் பொது இடத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட அனுமதி வழங்குவது கிடையாது எனக் கூறி கிருஷ்ணனை தடாலடியாக தனது ஜிபில் ஏற்றி காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்றார்.
இதையடுத்து நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு, கிருஷ்ணனை தனது சொந்த ஜாமீனில் விடுவித்தார் காவலர் ராபெர்ட் ஜெயின். தென்காசி நகரில் பரபரப்பாக காணப்படும் புதிய பேருந்து நிலையம் அருகில் மெயின் ரோட்டில் இளைஞர் ஒருவர் மேளதாளத்துடன் பிறந்தநாள் விழா கொண்டாடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
What's Your Reaction?






