Justin Bieber First Child Jack Blues Bieber : ‘பேபி’ என்ற பாடல் ஆல்பம் மூலம் 13 வயதிலேயே உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தவர் ஜஸ்டின் பீபர். இவர் கனடா நட்டைச் சேர்ந்த பாப் பாடகர் ஆவார். ‘Baby', 'As Long as You Love Me', 'Somebody to Love', 'Boyfriend', 'Beauty and a Beat', 'Yummy' உள்ளிட்ட பல ஹிட் பாடல்களைக் கொடுத்து கொடி கட்டிப் பறந்தார் ஜஸ்டின் பீபர். இவரும் பிரபல பாப் பாடகி செலீனா கோமஸும் சுமார் 10 ஆண்டுகள் வரை காதலித்து வந்தனர். இருவருமே மீடியா சைடில் மிகவும் பிரபலமான ஜோடியாக உலாவி வந்தனர். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, ஜஸ்டினுக்கும் செலினாவுக்கும் இடையே ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்தனர். இது அவர்களது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இவர்களது பிரேக் அப், பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு கண்டெண்ட்டாக மாறியது. ஜஸ்டின் மற்றும் செலினாவின் பிரேக் அப்புக்கு பின்னால் உள்ள காரணங்களைக் கண்டுபிடிப்பதாகக் கூறி பல கான்ஸ்பிரசி தியரிக்களை நெட்டிசன்கள் இன்றளவும் உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்படியான சூழலில்தான் ஜஸ்டின் பீபரும் பிரபல ஹாலிவுட் நடிகரான ஸ்டீபன் பால்ட்வின்னின் மகளுமான ஹெயிலியும் டேட்டிங் செய்து வருவதாக சில தகவல்கள் அரசல் புரசலாக வெளியாகின. இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக ஜஸ்டின் பீபரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது செலினா கோமஸின் ரசிகர்களை பெரும் கோபத்திற்கு ஆளாக்கியது. 2018ம் ஆண்டு ஹெயிலியை கரம் பிடித்தார் ஜஸ்டின் பீபர். அந்த நொடியிலிருந்து பல ட்ரோல்களில் சிக்கியதோடு மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளானர் ஹெயிலி பீபர். இருப்பினும் அதிலிருந்து மீண்டு வந்த அவர், கடந்த 2022ம் ஆண்டு சொந்தமாக ‘ரோட் (Rhode)' என்ற சரும பராமரிப்பு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி தற்போது வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார். இது அவரை ட்ரோல் செய்த நெட்டிசன்களின் வாயை அடைத்தது.
மேலும் படிக்க: "தம்பி விஜய்க்கு நான் இருக்கேன்... எனக்கு யாரு இருக்க?" - சீமான் ஆதங்கம்!
இந்நிலையில் ஜஸ்டின் பீபர் மற்றும் அவரது மனைவி ஹெயிலி பீபர் தம்பதிக்கு இன்று (ஆகஸ்ட் 24) காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. தங்களது குழந்தைக்கு ஜேக் புளூஸ் பீபர் எனப் பெயர் சூட்டியுள்ளனர். இது அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பல்வேறு பிரபலங்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற அம்பானியின் மகன் அனந்த் அம்பானி திருமண விழாவில் ஜஸ்டின் பீபர் பங்கேற்று பாட்டு பாடி விழாவை சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.