குழந்தை பெறும் மாணவிகளுக்கு நிதியுதவி.. விவாதத்தை கிளப்பிய ஆளுநரின் முடிவு

ரஷ்யாவிலுள்ள ஓரியோல் மாகாணத்தில், தாய்மார்களாகும் பல்கலைக்கழக மாணவிகளுக்கு  ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு விவாதங்களை கிளப்பியுள்ளது.

Mar 25, 2025 - 12:07
Mar 25, 2025 - 12:45
 0
குழந்தை பெறும் மாணவிகளுக்கு நிதியுதவி.. விவாதத்தை கிளப்பிய ஆளுநரின் முடிவு
ஆண்ட்ரி கிளிச்கோவ்

உக்ரைன் -ரஷ்யா இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்துவதற்காக பல நாடுகளும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இந்த போரினால் மட்டும் ரஷ்ய இராணுவ வீரர்கள் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ரஷ்யாவின் ஓரியோல் மாகாணம் தாய்மார்களாகும் பள்ளி-கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் முதல் மாகாணமாக மாறியுள்ளது. அதாவது, குழந்தை பெறும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக ரஷ்யாவின் நாணய மதிப்பில் சுமார் ஒரு லட்சம் ரூபிள் வழங்கப்படும் என்று ஓரியோல் மாகாணம் சமூக வலைதளத்தில் கடந்த வாரம் பதிவிட்டது. மேலும், இந்த ஊக்கத் தொகை வழங்கும் திட்டமானது 2025-ஆம் ஆண்டு முதல் 2027-ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

பிறப்பு விகிதத்தை அதிகரிப்பது மட்டுமே நோக்கம்:

இந்த அறிவிப்பானது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு டீன் ஏஜ் (பதின்ம வயது) பெண்கள் கர்ப்பமடைவதை ஆதரிக்கும் செயல் என கடுமையான குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. இது குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் என பலர் விமர்சிக்கத் தொடங்கிய நிலையில், இந்த திட்டம் குறித்து விளக்கமளித்துள்ளார் ஆளுநர் ஆண்ட்ரி கிளிச்கோவ்.

அதாவது,  ”ரஷ்யாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. போரினாலும் பல ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ரஷ்யாவில் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்” என்று ஆளுநர் ஆண்ட்ரி கிளிச்கோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் மக்கள் தொகையை அதிகரிக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், குழந்தைகள் பிறப்பு விகிதத்தை சுட்டிக்காட்டி அந்நாட்டு பெண்கள் 3-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow