அமெரிக்காவில் இருந்து சென்னை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.. உற்சாகமாக வழியனுப்பி வைத்த தமிழர்கள்!

. அமெரிக்க வாழ் தமிழர்கள் சிகாகோ விமான நிலையத்துக்கு திரண்டு வந்து முதல்வரை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். 'நீங்கள் மீண்டும் கண்டிப்பாக அமெரிக்காவுக்கு வர வேண்டும்' என்று முதல்வரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Sep 13, 2024 - 08:03
 0
அமெரிக்காவில் இருந்து சென்னை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.. உற்சாகமாக வழியனுப்பி வைத்த தமிழர்கள்!
Tamilnadu CM MK Stalin

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க கடந்த மாதம் 27ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருந்த முதல்வர் ஸ்டாலின், முதலில் சான் பிரான்சிஸ்கோவில் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டார். பின்பு அங்கிருந்து சிகாகோ சென்று சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்கவாழ் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டார். 

இதனைத் தொடர்ந்து திருச்சியில்  ரூ.2,000 கோடி முதலீட்டில் ஜேபில் (JABIL)நிறுவனத்தின் தொழிற்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பதங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், RGBSI நிறுவனத்துடன் 100 கோடி ரூபாய் முதலீட்டில் ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  RGBSI நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுகு, பணியாளர், மேலாண்மை, பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகும்.

இந்நிலையில், அமெரிக்காவில் சுமார் 17 நாட்கள் இருந்த முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளார். அமெரிக்க வாழ் தமிழர்கள் சிகாகோ விமான நிலையத்துக்கு திரண்டு வந்து முதல்வரை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். அப்போது முதல்வர் ஸ்டாலின் உருவப்படம் இருந்த பதாகைகளை அவர்கள் கையில் வைத்திருந்தனர். நீங்கள் மீண்டும் கண்டிப்பாக அமெரிக்காவுக்கு வர வேண்டும் என்று முதல்வரிடம் அமெரிக்க வாழ் தமிழர்கள் தெரிவித்தனர். இந்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின் Goodbye,USA என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் இருந்த இந்த 17 நாட்களில் உலகின் முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ரூ.7,516 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் சென்னை வந்தடைந்ததும் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரிவான அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow