GT vs PBKS: புதிய கேப்டனுடன் களமிறங்கும் பஞ்சாப்.. சமாளிக்குமா குஜராத்?
டாடா ஐபிஎல் 2025, டி20 கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் போட்டியில் குஜராஜ் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளனர். இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றிபெற்ற நிலையில், இன்று நடைபெறும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்
நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணிக்கு கடந்த ஐபிஎல் 2024 ஆம் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்குகிறார். 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலும், டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் முக்கிய பங்கு வகித்தார் ஸ்ரேயஸ் ஐயர். ஆனால் கொல்கத்தா அணி அவரை தக்க வைக்காமல் ரிலிஸ் செய்த போது, ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட 2-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.26.75 கோடிக்கு ஸ்ரேயஸ் ஐயரை ஏலத்தில் எடுத்தது. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஷ் இங்கிலிஸ், மற்றும் அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன், குல்தீப் சென், யாஷ் தாக்குர், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுடன் களம் காண்கிறது.
பேட்டிங்கில் பலம் வாய்ந்த குஜராத்
ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் சீசனிலேயே, அப்போதைய குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றது. தொடர்ந்து அடுத்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கடந்த ஆண்டு சுப்மன் கில் தலைமையில் களமிறங்கிய குஜராத் அணி 8 வது இடத்தை பிடித்தது. இம்முறை மெகா ஏலத்திற்கு பிறகு புதியதாக பல வீரர்களுடன் குஜராத் அணி விளையாட உள்ளது. கேப்டன் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், முகமது சிராஜ், ஷெர்ஃபேன் ரூதர்போர்டு, ஷாருக்கான் பேட்டிங்கில் பலமாக உள்ளனர். ககிசோ ரபாடா, ரஷித் கான் போன்றோர் பந்துவீச்சில் நம்பிக்கைக்குரிய வீரர்களாக திகழ்கின்றனர்.
உத்தேச ப்ளேயின் லெவன்
குஜராத் டைட்டன்ஸ்: சுப்மான் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், கிளென் பிலிப்ஸ், ஷாருக்கான், ராகுல் தெவாட்டியா, வாஷிங்டன் சுந்தர், ரஷித் கான், முகமது சிராஜ், ககிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா. இம்பாக்ட் வீரர்: மானவ் சுதார்/முகமது அர்ஷத் கான்.
பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், நேஹால் வதேரா, அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல். இம்பாக்ட் வீரர்: வைஷாக் விஜயகுமார் மற்றும் யாஷ் தாக்கூர்
What's Your Reaction?






