பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில் அதிபர் தேர்தல்.. வாக்குப்பதிவு தொடக்கம்!
கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக பொங்கியெழுந்த மக்கள் அதிபர் மாளிகையை சூறையாடினார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பிச் சென்றார்.
கொழும்பு: நமது அண்டை மாநிலமான இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். அவர் அதிபராக பதவியேற்றது முதல் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு சென்றது. கோத்தபய ராஜபக்சேவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் நிலைமை மிகவும் மோசமானது. இலங்கையில் வாழ வழியின்றி சிலர் தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற இடங்களுக்கு அதிகளாக தஞ்சம் புகுந்தனர். மேலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக பொங்கியெழுந்த மக்கள் அதிபர் மாளிகையை சூறையாடினார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு ரகசிய வாக்கெடுப்பு மூலம் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். இவரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், இலங்கையில் இன்று (21ம் தேதி) அதிபர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதன்படி இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் தொடங்கியுள்ளது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. பல இடங்களில் மக்கள் ஆர்வமுடன் நின்று தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மக்கள் வாக்களிக்க 13,134 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1 கோடியே 40 லட்சம் பேர் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதில் தமிழர்கள் மட்டும் 40 லட்சம் பேர். அசம்பாதவிங்கள் ஏற்படுவதை தவிர்க்க பல ஆயிரக்கணக்கான போலீசார், ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இலங்கை நேரப்படி இன்று இரவு 9.30 மணி முதலே தொடங்க உள்ளது. நாளை பிற்பகலுக்குள் இலங்கையின் அடுத்த அதிபர் யார்? என்பது தெரிந்து விடும்.
இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசா மற்றும் தேசிய மக்கள் சக்திதலைவர் அநுர குமார திசாநாயக்கே உள்பட மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ரணில் விக்ரமசிங்கே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தாலும் அதிபர் தேர்தலில் சுயேச்சையாக தான் போட்டியிடுகிறார்.
இலங்கை தமிழர்களில் ஆதரவு உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் ஆகிய கட்சிகள் ரணில் விக்ரமசிங்கேவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி சார்பில் போட்டியிடும் சஜித்பிரேமதாசாவுக்கு இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கத்து.
What's Your Reaction?