பலித்த கனவு.. திருச்சி என்ஐடியில் படிக்கப்போகும் பழங்குடியின மாணவிகள்! - சாதனை கதை

சிலரது கனவுகள் நிஜமாகும். அப்படித்தான் இரண்டு பழங்குடியின மாணவிகளின் உயர்கல்வி கனவு பலித்துள்ளது. அதுவும் சாதாரணமாக இல்லை. கடந்த 60 ஆண்டு கால வரலாற்றில் திருச்சி என்ஐடியில் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் ரோகிணி, சுகன்யா என்ற இரண்டு மாணவிகள். இருவருமே ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வெற்றி பெற்றவர்கள் என்பதுதான் இதில் கூடுதல் சிறப்பு.

Jul 10, 2024 - 17:25
 0
பலித்த கனவு.. திருச்சி என்ஐடியில் படிக்கப்போகும் பழங்குடியின மாணவிகள்! - சாதனை கதை
tribal students crack JEE

இந்தியா முழுவதும் பொறியியல் படிப்புக்களை பொறுத்தவரை ஜேஇஇ நுழைவுத்தேர்வு எழுத வேண்டியது கட்டாயம்.  இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் கோச்சிங் வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. சில பள்ளிகள் தாமாகமுன் வந்து இந்த வகையான பயிற்சி வகுப்புக்களுக்கு மாணவர்களைத் தயார் செய்கின்றன.

பழங்குடியின மாணவிகளான ரோகிணி மற்றும் சுகன்யா  இருவரும் 2024ம்  வருடத்திற்கான JEE தேர்வில் வெற்றி பெற்று சாதனை  படைத்துள்ளனர். துறையூர் அருகே பச்சைமலையை சேர்ந்த மலைவாழ் பகுதி, பழங்குடியின மாணவியான ரோகிணி, ஜேஇஇ தேர்வில் 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடமும் பிடித்துள்ளார். 

ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பழங்குடியின மாணவி ரோகிணி, திருச்சி என்ஐடி கல்லூரியில் வேதிப் பொறியியல் படிப்பை தேர்வு செய்துள்ளார். என்ஐடி கெமிக்கல் ஆய்வகத்தை பார்வையிட சென்றபோது ஏற்பட்ட ஆர்வமே ஜேஇஇ தேர்வில் வெற்றிபெற தூண்டுதலாக அமைந்ததாக, மாணவி ரோஹிணி தெரிவித்துள்ளார்.ஏழ்மையான சூழ்நிலையிலும் நன்றாக படித்து தனது உயர்கல்வி கனவை நனவாக்கியுள்ளார்.

என் படிப்புக்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. பள்ளியில் படித்தபோது என்ஐடி கெமிக்கல் ஆய்வகத்திற்கு என்னை அழைத்துச் சென்றனர். அப்போது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக, ஆசிரியர்களிடம் என்.ஐ.டியில் சேர்க்கை பெற வேண்டும் என்று கேட்டேன்.பள்ளியில் பிளஸ் டூ தேர்விலும் ஜேஇஇ தேர்விலும் தேர்ச்சி பெற்றதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி உதவி செய்தனர். என்னை ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மேல்படிப்புக்கு உதவி செய்யும் முதல்வர் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ரோகிணி. 

அதே போல்  அந்த கல்லூரியில் கரிய கோவிலை சேர்ந்த சுகன்யா என்ற மாணவி உற்பத்தி பொறியியில் படிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கருமந்துறையை அடுத்த வேளம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பழங்குடியின மாணவி சுகன்யா. இவர் கரியகோயில் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்துள்ளார். மூன்று வயதில் தனது தாயை இழந்த சுகன்யா, பெரியப்பா லட்சுமணன்  பெரியம்மா சின்னபொண்ணு  அவர்களின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மத்திய அரசு நடத்திய ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் முதன்மை மற்றும் மேல்நிலை ஆகிய இரண்டு படிநிலைகளிலும் வெற்றி பெற்றதன் வாயிலாக, மாணவி சுகன்யா திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

இந்த வெற்றி குறித்து பேசிய மாணவி சுகன்யா, “எனது பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சரியான முறையில் எனக்கு வழிகாட்டுதல்களை வழங்கினர். சாதிச்சான்று கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்தேன். ஆனால், ஆசிரியர்கள் உதவியால் எனக்கு சாதிச் சான்றிதழ் கிடைத்தது. பகல், இரவு என அனைத்து நேரங்களிலும் வெற்றி ஒன்றே குறிக்கோளாக கொண்டு படித்தேன்.அதனால், இந்த தேர்வில் வெற்றி பெற்றேன். 

எந்த தோல்வியும் நிரந்தரமானது அல்ல, மாணவர்கள் தைரியமாக தேர்வுகளை எதிர்கொண்டு எழுதி வெற்றி பெற வேண்டும். எனக்கு திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் உற்பத்திப் பொறியியல் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று அவர் கூறினார். திருச்சி என்ஐடியை பொறுத்தவரை  கடந்த 60 ஆண்டுகளில்  சீட் பெற்ற முதல் பழங்குடியின மானவிகள் என்ற பெருமையை  பெற்றுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow