முன்னாள் காதலனை கொலை செய்ய திட்டம் தீட்டிய இந்நாள் காதலன் - போலீஸிடம் சிக்கியது எப்படி?
2003ஆம் ஆண்டு சரவணன் ஊராட்சி செயலர் பணியில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்திருந்தபோது, டிரைவர் வேலைக்குச் சென்றுள்ளார்.
இந்நாள் காதலனுடன் சேர்ந்து முன்னாள் காதலனை கொலை செய்ய முயற்சித்த பெண் தலைமறைவான நிலையில், இந்நாள் காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் பரமத்தியை சேர்ந்தவர் சரவணன் (42) ஆரியூர் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அன்னபூரணி என்பவருடன் திருமணமாகி 16 வயதில் ஜெய்சங்கர் என்ற மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு அத்தப்பகவுண்டன் வலசு காலனியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் மனைவி ஜெயகாளியம்மாள் (30). சதீஷ்குமார் இறந்த நிலையில், தனியாக வசித்துவந்த ஜெயகாளியம்மாளுடன், சரவணனுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் பிரச்சனை காரணமாக பிரிந்துள்ளனர்.
இதற்கிடையே 2003ஆம் ஆண்டு சரவணன் ஊராட்சி செயலர் பணியில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்திருந்தபோது, டிரைவர் வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பால்பாண்டி (43) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சரவணன் ஜெயகாளியம்மாள் இடையே ஏற்பட்ட பிரச்சனை சம்மந்தமாக பால்பாண்டி தலையிட்டு சமாதானப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையே ஜெயகாளியம்மாள் சரவணனை விட்டு பிரிந்து பால்பாண்டியுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனையடுத்து, பால் பாண்டியனை தொடர்பு கொண்ட சரவணன் ஜெயகாளியம்மாவை தன்னுடன் சேர்த்து வாழ வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பால்பாண்டி நான் கர்நாடக மாநிலத்தில் இருப்பதால் தாளவாடி வரச் செல்லி இருக்கிறார்.
இதனை நம்பி அங்கு சென்ற சரவணனை, சிக்கள்ளி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கங்கப்பா (60) என்பவருடைய தோட்டத்திற்கு அழைத்து செல்வதாக கூறி சிக்கள்ளி வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திடீரென பால்பாண்டியன் மறைத்து வைத்திருந்த மரக்கட்டையால் சரவணனை தாக்கியுள்ளார்.
மேலும், கங்கப்பாவுடன் சேர்ந்து பால்பாண்டியன், ‘இப்படி குடும்பப் பிரச்சனை செய்து வருவாயா.. இத்தோடு செத்து தொலை’ என கையில் இருந்த மரக்கட்டையால் சரவணனின் பின் கழுத்தில் ஓங்கி அடித்துள்ளார். அதில் நிலை தடுமாறி விழுந்த சரவணனின் இரு கைகளையும் பின்புறம் மடக்கி கம்பியால் கட்டி, இரு கால்களையும், கழுத்திலும் கம்பியை சுற்றி கட்டி உள்ளார்.
பின்னர், ‘ஜெயகாளியம்மாள் இங்கு வருவாள்.. அவள் சொல்லி தான் நாங்கள் உன்னை அடித்து கட்டிப்போட்டு உள்ளோம். அவள் வந்தவுடன் அவள் முன்பே உன்னை அடித்து கொலை செய்து இங்கேயே புதைத்து விடுவோம்..’ எனக் கூறியுள்ளனர்.
அங்கேயே விட்டுவிட்டு இருவரும் சென்றபின் சரவணன், காலில் இருந்த கம்பி கட்டை கழற்றி விட்டு அருகில் இருந்த தோட்டத்திற்கு தப்பி சென்று அங்கு இருந்த ரமேஷ் என்பவரிடம் நடந்த விவரம் தெரிவித்துள்ளார். அவர் தாளவாடி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காயமடைந்த சரவணனை மீட்டு வனப்பகுதியில் மறைந்து இருந்து கண்காணித்தனர். அப்போது அங்கு வந்த பால்பாண்டியன், கங்கப்பா இருவரையும் மடக்கி பிடித்த போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் நடந்த சம்பவங்களை வாக்குமூலமாக தெரிவித்துள்ளனர்.
இருவரையும் கைது செய்த போலீசார் சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான ஜெயகாளியம்மாளை போலீசார் தேடி வருகின்றனர். தற்போதைய கள்ளக்காதலுடன் சேர்ந்து முன்னாள் கள்ளக்காதலனை பெண் உட்பட 3 பேர் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?