CA Topper Web Series Review in Tamil : அம்ரித் ராஜ் குப்தா, புனித் கிருஷ்ணா இணைந்து இயக்கியுள்ள திரிபுவன் மிஸ்ரா சிஏ டாப்பர் வெப் சீரிஸ், நெட்பிளிக்ஸ் ஓடிடி(Netflix OTT) தளத்தில் வெளியாகியுள்ளது. மனவ் கவுல், திலோட்டமா ஷோம், நைனா சரீன், ஸ்வேதா பாசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த வெப் சீரிஸ் 9 எபிசோட்களாக வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியுள்ள சிஏ டாப்பர்(CA Topper). நேர்மையான அரசு அதிகாரியான மனவ் கவுல் (திரிபுவன் மிஸ்ரா) மனைவி, இரண்டு குழந்தைகளுடன் நொய்டாவில் சிம்பிளாக வாழ்ந்து வருகிறார். லஞ்சம் வாங்கி சம்பாதிக்க விருப்பம் இல்லாத மிஸ்ரா, ஒருகட்டத்தில் பணம் இல்லாமல் கஷ்டப்படும் சூழல் உருவாகிறது. அதோடு கடனும் கழுத்தை நெறிக்க, கால் பாய், அதாவது பெண்களுக்கு செக்ஸ் சர்வீஸ் செய்யும் வேலையை தொடங்குகிறார்.
சிஏ டாப்பர் என்ற பெயரோடு இணையம் மூலம் செக்ஸ் சர்வீஸ் ஒர்க் செய்யத் தொடங்கியதும் மிஸ்ராவின் காட்டில் அடை மழை பெய்கிறது. அதோடு லட்சக்கணக்கில் பணமும் சம்பாதிக்க கடன் சிக்கல்களில் இருந்து வெளியே வருகிறார். அதேபோல், பெண்கள் மத்தியிலும் சிஏ டாப்பரின் சர்வீஸுக்கு கடும் கிராக்கி ஏற்படுகிறது. எல்லாம் நன்றாக போய்கொண்டிருக்க, ஒரு கொலை சம்பவம் மிஸ்ராவின் வாழ்க்கையையே புரட்டி போடுகிறது. இறுதியில் சிஏ டாப்பரான மிஸ்ரா என்ன ஆனார் என்பது தான் இந்த வெப் சீரிஸின் ஒன்லைன் ஸ்டோரி.
சிஏ டாப்பர் வெப் சீரிஸின்(CA Topper Web Series) முதல் காட்சியே ரசிகர்களை மிரள வைக்கிறது. ஒருநிமிடம் இது போர்னோகிராபி படமாக இருக்குமோ என ஒரு ஹைப் கொடுத்து கதைக்குள் ரசிகர்களை வர வைத்த விதம் அட்டகாசம். முதல் எபிசோடிலேயே வெப் சீரிஸின் மிக முக்கியமான கேரக்டர்கள் என்ட்ரியாகிவிடுகின்றனர். அவர்களின் முன்கதைகளை சொல்லிவிட்டு திரைக்கதையை வேறு திசையில் பயணிக்க விடுவதும், பின்னர் சிஏ டாப்பரை வைத்து அடல்ட் காமெடியில் அட்ராசிட்டி செய்ததும் நல்ல உத்தி எனலாம். சிஏ டாப்பர் மிஸ்ராவினுடைய மனைவியின் தம்பி கேரக்டரும், அவரது மனைவியாக வரும் ஸ்வேதா பாஸுவும் இந்த வெப் சீரிஸின் துருப்பு சீட்டாக மாஸ் காட்டியுள்ளனர்.
ஒரு காட்சியில் அவர்கள் தான் தனது கஸ்டமர் எனத் தெரியாமல் இருவருடனும் Threesome சர்வீஸ் செய்ய மிஸ்ரா செல்வதும், ஹோட்டல் ரூமில் நடக்கும் கூத்தும் சரவெடி காமெடி சம்பவம். அதேபோல், மிஸ்ராவின் குருஜி கேரக்டர், ஸ்வீட் கடை ஓனர் ப்ளஸ் தாதா, அவரது மனைவி திலோத்தமா, போலீஸ் இன்ஸ்பெக்டர் & டீம் என ரகளையான கேரக்டர்களால் சிஏ டாப்பர் சிரிக்க வைக்கிறது. இன்னொரு காட்சியில் லாட்ஜில் ரெய்டு நடக்க, அங்கே சிஏ டாப்பர் தான் பணத்திற்காக செக்ஸ் சர்வீஸ் செய்ய வந்தவர் எனத் தெரியும் போதும் காமெடியில் தெறிக்க விட்டுள்ளனர்.
இப்படி சீன் பை சீன் அடல்ட் காமெடியோடு திரைக்கதை நகர்ந்தாலும், பல இடங்களில் மிடில் கிளாஸ் குடும்பங்களின் பொருளாதாரச் சிக்கல், பெண்களின் செக்ஸ் தேவைகள் என்ன என்பதையெல்லாம் பட்டும்படாமல் எதார்த்தமாக சொல்லிக்கொண்டே இருப்பது கவனிக்க வைக்கிறது. முக்கியமாக கடைசி எபிசோடில் மிஸ்ராவின் மாமியார், “எங்க காலத்தில் எல்லாம் இப்படி சர்வீஸ் இல்லாம போச்சே... நானெல்லாம் எப்படி கஷ்டப்பட்டேன் தெரியுமா..?” என பேச்சுவாக்கில் சொல்வது, பெண்களின் மறுமணம் பற்றிய கேள்வியை முன் வைத்துள்ளது. அதேபோல், திருமணமான பெண்கள் அவர்களின் கணவரை இழந்தபின்னரோ அல்லது மத்திம வயதை கடந்துவிட்டாலோ, உடல் சார்ந்த தேவைகளையும் எதிர்பார்ப்பையும் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதாக இந்த சமூகம் கட்டமைத்து வைத்துள்ள பிம்பங்களை அடித்து நொறுக்குகிறது சிஏ டாப்பர்.
நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள சிஏ டாப்பர், இந்தி வெப் சீரிஸ்ஸாக இருந்தாலும் தமிழிலும் பார்க்க முடியும். ஆனாலும், குழந்தைகளை வைத்துக்கொண்டு பார்ப்பதற்கான வெப் சீரிஸ் இது இல்லை என்பது முக்கியமானது. ஒவ்வொரு எபிசோடும் ஒரு மணி நேரம் வரை ரன்னிங் டைம் இருப்பது மட்டுமே கொஞ்சம் சோதிக்கிறது. ரன்னிங் டைமை குறைத்து 8 எபிசோட்களாக வெளியாகியிருந்தால் இன்னும் தரமாக வந்திருக்கும். ஸ்பானிஷ், பிரெஞ்ச், ஆங்கிலம் போன்ற மொழிகளில் இதுபோன்ற அடல்ட் காமெடி வெப் சீரிஸ்கள் அதிகம் வந்துள்ளன. ஆனால், இந்தியாவில், அதுவும் இந்தியில் இப்படியொரு வெப் சீரிஸ் வந்துள்ள ஓடிடி ரசிகர்களை கவனிக்க வைத்துள்ளது.